இறக்குமதி செய்யப்படும் கோழிகளால் உள்ளுர்க் கோழி வளர்ப்பாளர்கள் பாதிப்பு!

Friday, October 12th, 2018

புதுக்குடியிருப்பில் இருந்தே இறைச்சிக்கோழிகளை சந்தை வியாபாரிகள் கொள்வனவு செய்ய வேண்டுமென்று கடந்த 8 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத் தலைவரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பில் பெருமளவானவர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள். மிகவும் வறியவர்கள். அவர்களுக்கு பொது அமைப்புகளாலும் அரசியல் தலைவர்களாலும் வழங்கப்பட்டு வருகின்ற வாழ்வாதார உதவியாக இறைச்சிக் கோழிக் குஞ்சுகளை வளர்த்து வருகின்றார்கள். விலைகுறைவிற்கு சந்தை இறைச்சி வியாபாரிகளால் கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றார்கள்.

இதேவேளை அதிகளவான இறைச்சிக் கோழிகள் வெளிமாவட்டங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றமையினை மாற்றி அமைக்க வேண்டும்.

குறிப்பாக பிரதேச சபையினால் புதுக்குடியிருப்பு சந்தையில் உள்ள இறைச்சிக் கடை 16 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் விலையில் இறைச்சியினை விற்பதன் ஊடாகவே இலாபத்தை எட்ட முடியுமென்றும் வெளிமாவட்டத்தில் இருந்தே இறைச்சிக் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு கொள்வனவு செய்து வருவதாக பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இன் நிலையில் பண்ணையாளர்களை ஒன்றிணைத்து அவர்களை சங்கமாக மாற்றி அவர்களிடம் இருந்து இடைவிடாது சந்தைக் கடைக்கு கோழி இறைச்சி கிடைக்குமாக இருந்தால் அதனைக் கொள்வனவு செய்யச் சந்தைக் கடை உரிமையாளர்கள் தயாராகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் சந்தைக்கான ஒப்பந்தத்தின் போது பிரதேச சபை இதனை நடைமுறைப்படுத்தி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கோழி வளர்ப்பாளர்களின் இறைச்சிக் கோழிகளை விற்பனை செய்யும் இலகுபடுத்தலை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: