கொரோனா தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்க அறிவுறுத்து!

Wednesday, August 3rd, 2022

கொவிட்-19 ஆபத்து மீண்டும் அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 மற்றும் குரங்கு காய்ச்சல் தொற்று நிலைமை தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து ஆற்றிய உரையில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொவிட்-19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்தில், கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளதுடன், 35 இறப்புகள் பதிவாகியுள்ளன.

35 இறப்புகளில் 28 இறப்புகள் ஜூலை 18 க்குப் பின்னர் நிகழ்ந்துள்ளன. இதனைப் பார்க்கும்போது, கொவிட் தடுப்பூசியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற விடயமும் தெரிகிறது.

முதலாம் கட்டத்தில் 17 மில்லியன் பேர் தடுப்பூசியைப் பெற்ற நிலையில், இரண்டாம் கட்டத்தில் அது 14 மில்லியனாகக் குறைந்தது.

மூன்றாம் கட்டத்தில், 08 மில்லியன் பேர் தடுப்பூசியைப் பெற்ற நிலையில், நான்காம் கட்டத்தில் 22 ஆயிரத்து 623 பேர் மாத்திரமே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர்.

குறிப்பாக மேல்மாகாணத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது தடவைகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது குறைந்துள்ளது. எனவே, தடுப்பூசி ஏற்ற மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது 08 மில்லியன் தடுப்பூசிகள் உள்ளன. அதனை ஒக்டோபர் மாதம் வரை பயன்படுத்தலாம்.

அந்த 08 மில்லியன் தடுப்பூசிகளை ஒக்டோபரில் வழங்கி முடிக்க முடியாது. எனவே, ஒரு பகுதியை வேறு நாட்டிற்கு வழங்க நேரிடும். தடுப்பூசி மக்களுக்காக கொண்டுவரப்பட்டதாகும்.

எனவே தடுப்பூசி ஏற்றாத அனைவரும் விரைவில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: