இன்று நள்ளிரவுமுதல் தேர்தல் ஆணைக்குழு வசமாகும் அதிகாரம் – இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 16th, 2024

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கொழும்பில் இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.

ஜுலை மாதம் 17 ஆம் திகதிக்குப் பின்னர் ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையில் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக இடமுள்ளது.

அதன் அடிப்படையில் ஜுலை மாதம் இறுதிக்குள் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும்.  அந்த தினத்தில் இருந்து 14 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனு கோரல் திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் இன்று நள்ளிரவுமுதல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்..

இதேவேளை, நிதி அமைச்சின் அதிகாரிகள் நாளை (17) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: