அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – நெற் செய்கை விவசாயிகளுக்கு 50kg யூரியா மூடை ஒன்றை 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கவும் நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!
Saturday, October 29th, 2022
7,070 மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
எனவே எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது
இதனிடையே
உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக் கடன் திட்டத்தின் கீழ் 13,000 டொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறையுடைய யூரியா மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்கள் பலவற்றின் நன்கொடைகளுக்கு மேலதிகமாகவே உலக வங்கியிடமிருந்து இந்த கடன் கிடைத்துள்ளது.
இலங்கையில் பெரும்போக நெற்செய்கைக்கு சுமார் 150,000 தொன் யூரியா உரம் தேவைப்படுகிறது. அதனை முழுமையாக விநியோகிக்க முடியுமென விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சுரேன் பட்டகொட ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கமத்தொழில் சேவை மையங்கள் மூலம் இந்த உரங்கள் வயல் உரிமையாளர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 2 ஹெக்டயர் வரையான நெல் வயல் உரிமையாளர்களுக்கு, தாம் பயிர்ச் செய்கைக்கு தயார்படுத்திய வயல் நிலங்களுக்கு ஏற்ப உர மூடைகளைப் கொள்வனவு செய்ய முடியும்.
விவசாய திணைக்களத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வலயத்தைப் பொறுத்தே விவசாயி ஒருவரால் கொள்வனவு செய்யப்படும் உச்சபட்ச உரத்தின் அளவு தீர்மானிக்கப்படும்.
அதுதவிர, சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு 60,000 ஹெக்டயர்களுக்கு அவசியமான 12,000 மெட்ரிக் தொன் யூரியா வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக வழங்கப்படும் 50 கி.கி. யூரியா மூடையின் விலை 15,000 ரூபாவாகும்.
உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் மற்றும் பூகோள அரசியல் நிலைமைகள் காரணமாக உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக மிகவும் சவாலானதொரு சந்தை நிலைமை ஏற்பட்டுள்ளது.
சந்தை விலை உயர்வுக்கு மத்தியிலும், 3 கட்டங்களில் 12,500, 50,000, 45,000 மெட்ரிக் தொன் யூரியாவை பெறுவதற்காக 3 ஒப்பந்தங்களில் விவசாய அமைச்சு கைச்சாத்திட்டுள்ளது.
இதேவேளை மேலும் 25,000 மெட்ரிக் தொன் யூரியா கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றும் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
அத்துடன் சலுகைக் கடன் அடிப்படையில் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 21,000 மெட்ரிக் தொன் யூரியா பெரும் போகத்தில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


