அரச சேவையாளர்களின் வேதனம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, March 27th, 2023

மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான அரச சேவையாளர்களின் வேதனம், ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியின் ஒரு தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற பேரூந்துகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு அரசாங்க வருமானம் போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்களது வேதனம், ஓய்வூதிய கொடுப்பனவும் சமுர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்காக 196 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த மாதத்தின் மொத்த வருமானமாக 173 பில்லியன் ரூபாவாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் செலவினங்களுக்கு மேலதிகமாக 23 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

புத்தாண்டு காலம் என்பதால் இரண்டு மாதங்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்கவுள்ளதால், அதிகளவான நிதி தேவைப்படுகின்றது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகையினை பெற்றுக்கொள்ள திறைசேரியிடம் கோரியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: