எரிபொருள் விலை அதிகரிப்பு – நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றில் – ஹர்ஷ எம்.பிக்கு பிரதமர் மஹிந்த பதில்!

Saturday, April 23rd, 2022

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதியமைச்சரினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அனுமதி விரைவாக சபையில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்  போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எம்.பி ஹர்ஷ டி சில்வா அது தொடர்பில் நேற்று சபையில் தெரிவிக்கையில் –

கடந்த சில தினங்களுக்கு முன் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. எனினும் நிதியமைச்சர் நாட்டில் இல்லாத சமயம் அவரது அனுமதியின்றியே அந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அதிகரிப்புக்கான உத்தியோகபூர்வ அனுமதி நிதியமைச்சரினால் வழங்கப்படவில்லை. நிதியமைச்சர் அதற்கான அனுமதியை தொலைபேசி மூலம் வழங்கியிருந்ததாக சபையில் எரிசக்தி, மின்சக்தி அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவ்வாறு அந்த அனுமதி பெறப்பட்டிருந்தால் அது முறையற்றது. சட்டபூர்வமற்றது என நாம் தெரிவித்திருந்தோம்.

எனினும் அது தொடர்பான உறுதியான பதிலை இதுவரை அரசாங்கம் சபையில் தெரிவிக்கவில்லை என அவர் நேற்று சபையில் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: