யாழில் 1, 300 ஹெக்டெயரில் வெங்காய உற்பத்தி – மாகாண பணிப்பாளர்!

Saturday, March 17th, 2018

யாழ். மாவட்டத்தில் இவ் வருடம் 1, 300 ஹெக்டெயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருடங்களாக வெங்காய உற்பத்தியில் யாழ். மாவட்டம் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது. இதனால் சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டே சந்தைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இவ் வருடம் காலநிலை சாதகமாக அமைந்ததினால் வெங்காய உற்பத்தியும் அமோகமாக அதிகரித்துள்ளது. 2016 – 2017 காலபோக செய்கையில் எதிர்பாரா புள்ளி நோய் ஏற்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால் எதிர்பார்த்த விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சிறுபோக செய்கையில் விதை வெங்காயம் தேவையாக இருந்தது. காலபோக செய்கையில் பெற்றுக்கொள்ளும் வெங்காயத்தின் ஒரு பகுதியை விவசாயிகள் விதை வெங்காயமாக களஞ்சியப்படுத்தி வைத்திருப்பார்கள்.

காலபோகத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைவாக காணப்பட்டதனால் 2017 சிறுபோகத்திற்கு வெங்காயத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. 2017 – 2018 சிறுபோக செய்கையை விவசாயிகள் வெற்றிகரமாக செய்திருந்தார்கள்.

2017 சிறுபோகத்திலும் வெங்காயச் செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் விதை வெங்காயத்தை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்தது. அத்துடன் திணைக்களம் ஊடாக சில திட்டங்களை நாங்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்திருந்தோம்.

உண்மை விதைகளை வழங்கி உண்மை விதைகள் ஊடாக நாற்றுக்களை உற்பத்தி செய்து அதனூடாக வெங்காயம் உற்பத்தி செய்யும் முறைமையை ஏற்பாடு செய்திருந்தோம். இதன் ஊடாகவும் வெங்காய உற்பத்தி இம் முறை அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்ட முடியும்.

சின்ன வெங்காய செய்கை வடமாகாணத்திலே அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வடமாகாணத்தில் 5, 000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுகின்றது. இதனை கருத்தில்கொண்டு உண்மை வெங்காய செய்கை மூலம் வெங்காய உற்பத்தியை அதிகரிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts: