அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்….! அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்தது – நீதிபதி இளஞ்செழியன்!

Friday, September 16th, 2016

யாழில் அநீதிக்காக மாணவிகள் போராடிய போது படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடுள்ளவர்கள் அமைதியாக இருந்தமை குறித்து வேதனை வெளியிட்டுள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் யாழ்ப்பாணக் கம்பன் விழா நேற்று யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் கொழும்புக் கம்பன் கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் முன்னாள் நீதியரசர் ஜெ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மண்ணுக்காகவே போராடியது மகாபாரதம். பெண்ணுக்காகப் போராடியது இராமாயணம். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நீதி தவறினான். கண்ணகி மதுரை மாநிலத்தினை எரித்தாள். பசுமாடு நீதி கேட்டு மனுத்தாக்கல் செய்த போது மனு நீதி கண்ட சோழன் மனு நீதி வழங்கினான்.

யாழ்ப்பாணத்தில் நீதி வேண்டி ஓடிய காட்சிகள் அண்மையில் அரங்கேறியது. அதனை விட ஜனாதிபதியிடம் காலில் விழுந்து மனுக் கொடுத்த காட்சிகளையும் மாணவர்கள் அரங்கேற்றினர். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புக் கூறத் தவற வேண்டாம். ஏனெனில், அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்…. அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்த ஒரு சம்பவமாகத் தான் நான் காணுகின்றேன்.

படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடு உள்ளவர்கள் யாழ்ப்பாணம் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறுபவர்கள் ஆகியோர் அமைதியாகத் தான் இருந்தார்கள். நீதிகள் வீதியில் இறங்கும் போது மக்கள் அனைவரும் அமைதியாகத் தானிருந்தார்கள். பிரச்சினைகள் வருவது இயற்கை. அதில் தவறு இல்லை. ஆனால், பிரச்சினையினைக் கையாளும் விதம் முக்கியமானது. அனைவரும் இதனை உணரவேண்டும் என நீதித் துறை பாசறையிலிருந்து அறைகூவலாக விடுக்கின்றேன்.

சட்டத்திற்கு, சட்டவாட்சி நிலைகூறும் நீதிக்கு முக்கியத்துவமளித்து அவற்றிற்குத் தலை வணங்கும் புதிய யாழ்ப்பாணத்தினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: