சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதைக் குற்ற வழக்கு! ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, September 22nd, 2016

சுன்னாகம் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் மீது சித்திரவதை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்த போதிலும், அவர்கள் வியாழனன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு வியாழனன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

சட்டமா அதிபருடைய பிரதிநிதிபதியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி மன்றாடியார் அதிபர் (பிரதி சொலிசிட்டர் ஜெனரல்) குமாரரட்னம், குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் அதிகாரியினால் எதிரிகளுக்கான நீதிமன்றத்தின் அழைப்பாணைகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்க முடியவில்லை.

எனவே, மீண்டும் அவர்களுக்கு அழைப்பாண பிறப்பித்து ஒரு தவணை தரவேண்டும் என மன்றில் கோரினார்.

அதனையடுத்து, மீண்டும் எதிரிகளுக்கு அழைப்பாணை பிறப்பித்த நீதிபதி இளஞ்செழியன், ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின்பேரில் சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவரை பொலிசார் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேக நபரை சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக 8 பொலிசார் மீது சட்டமா அதிபர் குற்றம் சுமத்தி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் செட்டம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது, குற்றம் சுமத்தப்பட்டவர்களாகிய 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் இருப்பதாகவும்,

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிபதியிடம் கோரியிருந்தார்.

அவருடைய கோரிக்கையை ஏற்ற நீதிபதி அவர்கள் 8 பேரையும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியின் ஊடாக அழைப்பாணை விடுத்திருந்தார்.

எனினும் அவர்கள் அந்த அழைப்பாணைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை.

இந்த நிலையிலேயே பிரதி சொலிசிற்றர் ஜெனரலின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

A21

Related posts: