வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சி – மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு – கால்நடைகள் பெரும் பாதிப்பு!

Saturday, August 12th, 2023

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன் மக்களின் நீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் குறைவாக உள்ளமையால் அனைவருக்கும் குடிநீருக்காகவும் சுகாதாரத் தேவைகளுக்காகவும் சமமாக நீரை விநியோகிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகனங்களை கழுவுதல், சிறு வீட்டுத் தோட்டங்களை அமைத்தல் போன்ற அத்தியாவசியமற்ற பணிகளுக்கு நீரை பயன்படுத்துவதை குறைத்து அன்றாட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் வீழ்ச்சியடைந்துள்ள கிரிந்திவெல்கால – தொராதத்த வாவியில் மீன் பிடிக்கச் சென்ற 13 இளைஞர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 11 பேரும் குருநாகல் பேதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரழந்தவர்களின் பிரேத பரிசோதனை குருநாகல் பேதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவர்களது மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவர்களின் உடல் மாதிரிகள் பொரளை சுகாதார வைத்திய நிறுவகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர் நிலைகளில் நீர் மட்டம் முழுமையாக குறைவடைந்துள்ளதுடன் சிறிய குளங்கள் மற்றும் நீரோடைகள் முற்றாக வறண்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கால்நடைகளும் விலங்குகளும் குடிநீர் இன்றி உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கெப்பத்திகொல்லேவ மற்றும் ஹெரவ்பொத்தான செயலாளர் பிரிவுகளில் வீசிய கடும் காற்று காரணமாக 105 வீடுகள் சேதமடைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் குறித்தப் பகுதியில், பலத்த காற்றுடன் வீசிய மழையினால் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: