வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் .பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய இரதோற்சவத்தில் ஆயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்பு!

Friday, August 26th, 2016

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் .பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி இரதோற்சவம் கிருஷ்ண பகவான் அவதரித்த நன்னாளான நேற்று  (25) மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

அதிகாலையில் ஆரம்பமாகிய விசேட அபிஷேக பூசைகளைத் தொடர்ந்து முற்பகல் 10.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஒலி வானைப் பிளக்க நண்பகல் -12 மணியளவில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜப் பெருமாள் இரதமேறி வெளிவீதி வலம்வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்கள் அங்கப்பிரதட்சணை, அடியளித்தல், தூக்குக்காவடி, ஆட்டக்காவடிகள், கற்பூரச்சட்டி எடுத்தல் எடுத்துத் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். எம்பெருமானின் தேர் பகல்-01 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து பிற்பகல்-1.30 மணியளவில் உறியடி உற்சவம் இடம்பெற்றது. பச்சை சாத்தப்பட்ட வரதராஜப் பெருமாள் பிற்பகல்- 2.30 மணியளவில் தேரிலிருந்து ஆலயம் நோக்கி அவரோகணித்தார்.

நேற்றைய இரதோற்சவத்திற்கு வருகை தந்த பக்தர்களின் நன்மை கருதி ஆலயச் சூழலிலுள்ள மடாலங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. தாகசாந்தி நிலையங்கள்   அமைக்கப்பட்டுப் பக்தர்களின் தாகம் தீர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.  இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை(26) தீர்த்தோற்சவமும் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed (2)

unnamed (1)

unnamed

unnamed (3)

Related posts: