ரவிராஜ் வழக்கை ஜுரிகள் சபைக்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தொடர்பான வழக்கு விசாரணையை விசேட ஜுரிகள் சபை முன்பாக முன்னெடுப்பதற்கான அனுமதியை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குறைந்தபட்ச பட்டதாரிகள் பங்கேற்புடன் ஜுரிகள் சபைக்கு முன்பாக இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மனிலால் வைத்தியதிலக்க அனுமதியளித்தார். கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற முன்னாள் எம்.பி ரஜிராஜ் படுகொலை வழக்கு இன்றைய தினமும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகள் தரப்பிலான எழுத்துமூல வாதங்கள் கடந்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தன. அரச சட்டவாதி தரப்பிலும் கடந்த தவணையில் வாதங்கள் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வழக்கை ஜுரிகள் சபையிலா அல்லது தனி நீதிபதி முன்னிலையிலா விசாரணை செய்வது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஜுரிகள் சபை முன்பான விசாரணைக்கான அனுமதியை நீதிமன்றம் அளித்துள்ளது. இதேவேளை இந்த வழக்கு தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் முன்நிறுத்தப்பட்டுள்ளதோடு மேலும் மூன்று சந்தேக நபர்கள் இல்லாமல் ஜுரிகள் சபை முன்பாக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
Related posts:
|
|