புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம் கோருகின்றது நீதி அமைச்சு!

Monday, October 19th, 2020

புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சு, பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கருத்துகளை முன்வைக்க விரும்பும் அனைவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பவர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் செயலாளருக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் நீதி அமைச்சு கோரியுள்ளது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் 12 தலைப்புகளின் கீழ் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி  – அரசின் தன்மை, அடிப்படை உரிமை, மொழி, அரச கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை கடமைகள், நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம், மக்கள் கருத்துக்கணிப்பு, வாக்குரிமை, தேர்தல், அதிகார பரவலாக்கல், அதிகாரப் பகிர்வு, நீதித்துறை, அரச நிதி, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் வேறு ஆர்வம் செலுத்தப்படுகின்ற துறைகளின் கீழ் மக்கள் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும்.

அத்துடன் சுருக்கமான கருத்துகளையும் யோசனைகளையும் நிபுணர் குழு வரவேற்பதாகவும் நீதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தமது கருத்துகள் மற்றும் யோசனைகளை பதிவுத் தபால் மற்றும் expertscommpublic@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றிற்கு அனுப்பிவைக்க முடியும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: