அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு ஐ.நா பாராட்டு!

Saturday, January 18th, 2020


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினையை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வறுமையை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகும். குறைந்த வருமானமுடைய ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் ஆகியன தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தினார்.

கல்வித்துறை, தகவல் தொழிநுட்ப மேம்பாடு மற்றும் அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம் போன்ற செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஐ.நா பிரதிநிதி இணக்கம் தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயன்முறையொன்றினை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts: