பிரான்ஸ் சுற்றுலா முகவர் நிலையத்தின் வருடாந்த சம்மேளனம் இலங்கையில்!

Friday, May 6th, 2016

பிரான்ஸ் சுற்றுலா முகவர் நிலையத்தின் (SNAV) வருடாந்த சம்மேளனமொன்றினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையில் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள இச்சம்மேளனத்தின் மூலம் ‘இலங்கையை’ பிரான்ஸ் சுற்றுலா பயணிகளுக்கிடையில் இறுதி சேர்விடமாக விருத்தி செய்வதற்கு இச்சம்மேளனம் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிகழ்வில் பிரான்ஸின் 1300 போக்குவரத்து துறை தொடர்பான நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன. அத்துடன் வருடாவருடம் நடைபெறுகின்ற இச்சம்மேளனத்தில் சுமார் 600 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டங்கள், ஊக்குவிப்புச் சுற்றுலாக்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு உகந்த ஓரிடமாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஓரங்கமாக மேற்படி சம்மேளனத்தை இலங்கையில் நடாத்துவதற்காக இலங்கை மாநாட்டுப் பணியகம் மூலம் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக் கொண்டு பிரான்ஸ் சுற்றுலா முகவர் நிலையம், தனது வருடாந்த சம்மேளனத்தை இலங்கையில் நடாத்த தீர்மானித்துள்ளது.

அவ்வகையில் இலங்கையில் இச்சம்மேளனத்தினை நடாத்துவதற்கு தேவையான வசதிகளை அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்வதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவமத அலுவல்கள் அமைச்சர் ஜோன் ஏ.இ. அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

Related posts: