தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம்: நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இந்த சட்டத்தை நிறைவேற்றிய நாடு என்ற பெருமை எமக்குரியது என்றும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தமது சேவைகளை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –  

தரவு அதிகாரசபை தொடர்பிலும் அதன் தகுதி, தகைமை தொடர்பிலும் சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரனும் சில கருத்துக்களை முன்வைத்தார்.

உண்மையில் கடந்த அரசாங்கத்தில் நீங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டம் கூட கொண்டுவரப்பட்டிருக்காது.

ஊடகவியலாளர்களின் உரிமை தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டு மக்களின் உரிமை, மக்களுக்கான கருத்து சுதந்திரம் என்பது எல்லாம் ஒன்றுதான்.

ஊடகத்திற்கு என தனியான சுதந்திரம் கிடையாது, ஊடகவியலாளர்கள் சரியானதை தெரிவிக்க வேண்டும். தேவையில்லாதவற்றுக்கு மட்டுப்படுத்தல்கள் மிக அவசியமானது. அனைத்திற்கும் சுதந்திரத்தை வழங்க முடியாது.

இந்த சட்டமூலத்தின் மூலம் தேவையான சுதந்திரம் ஜனநாயக வழியில் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமையில் சில மட்டுப்படுத்தல்கள் காணப்படுகின்றன. இந்த சட்டம் அவசியம் இல்லை என எதிர்க்கட்சியினர் கூட எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இது தேவை என்பதே அனைவரதும் கருத்தாக உள்ளது.

இதன் மூலம் எவருடைய சுதந்திரமும் கட்டுப்படுத்தப்படவில்லை அடிப்படை உரிமைகளுக்கு சுதந்திரமளித்ததைத் தொடர்ந்து இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊடக மட்டுப்படுத்தல்கள் இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுவதை நாம் ஏற்க முடியாது. இதில் தகவல் அறியும் உரிமை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் நலன் புரிச் செயற்பாடுகளுக்கே இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

11 நாடுகளின் உறுதியான ஆதரவுக்கு நன்றி - நடுநிலை வகித்த இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கும் இலங்கை அரசா...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் நாளை வரை ஒ...
விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் உடன் அறிவிய...