பனம் உற்பத்தியாளர் சமூகத்தை உருவாக்குவதற்கான தெளிவூட்டல்!

Wednesday, May 30th, 2018

வடக்கு மாகாணத்தில் பனம் உற்பத்தியாளர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தெளிவூட்டல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் பனை ஒரு சிறந்த வாழ்வாதார பயிராகக் காணப்படுகின்றது. அதன் நன்மைகள் பற்றி சிந்திப்பதற்கு மக்களிடம் அது தொடர்பான அறிவு போதாமல் உள்ளது. ஆகவே வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு வருடத்தில் 80 கிராமங்களில் பனை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்தில் கிடைக்கும் பயனை எதிர்பார்த்து மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றார்கள்.

ஆகவே அவர்களுக்குப் பனை சார்பாக அதன் உற்பத்தி தொடர்பான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுகளை வழங்கி அவர்களை இந்த உற்பத்தி கொண்ட சமூகமாகப் பதிவு செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

ஆயிரம் பேர் வரையில் விழிப்புணர்வுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் பனம் உற்பத்திகளை செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வருபவர்களுக்கு பயிற்சிகள், ஆலோசனைகள், கருவிகள் என்பன வழங்கப்படும். அத்துடன் அவர்கள் ஒரு சமுதாயமாக இணைந்து செயற்பட வேண்டும். இருபது பேர் கொண்டவர்கள் ஒரு உற்பத்தி சமூகமாகப் பதிவு செய்யப்பட்டு அவர்களின் உற்பத்திகள் நடைபெறும் வகையில் வழிவகைகள் செய்து கொடுக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: