இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் விசேட பேச்சுவார்த்தை – கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என வெளிவிவகார அமைச்சர் உறுதியளிப்பு!

Friday, January 20th, 2023

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நாட்டிற்கான முதலீட்டு வரங்களை மேலும் வலுப்படுத்த தேவையான ஆதரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாலைதீவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இந்நாட்டுக்கு வந்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டபோது இலங்கையின் பொருளாதார மீட்சி துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளியிட்டேன் என ஜெய்சங்கர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அத்தியாவசியமான இந்தத் தருணத்தில், மேலும் ஒத்துழைப்பை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன்போது அவர் கூறியுள்ளார்.

இதன்போது, உட்கட்டமைப்பு இணைப்பு, எரிசக்தி, தொழில் சுகாதாரம் முதலான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

முன்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட விசேட குழுவினர் நேற்று (19) மற்றும் இன்று(20) ஆகிய இரு தினங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மாலைதீவின் தலைநகர் மாலியிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினரை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் விமானநிலையத்தில் வரவேற்றர்.

அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: