நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை – மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவும் நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021

நாட்டில் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனை இன்றுமுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலை அமைச்சரவை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்படும் கத்தி, கரண்டி, முள்கரண்டி, ஊதுபத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன், உரிய பருமைக்கும் குறைவான பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் உற்பத்தியிலான பூமாலைகள், இடியப்பத் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளும் தடை செய்வதற்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தடை செய்யப்படும் இவ்வாறான லன்சீட் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றதா என தேடி பார்ப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி யாராவது அதனை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: