லேக் ஹவுஸில் 300 பேரை சுய விருப்பில் பணி நீக்க 600 மில்லியன் அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022

லேக் ஹவுஸ் நிறுவனத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போதுள்ள ஊழியர்களில் ஆகக் குறைந்தது 300 பேரையாவது சுய விருப்பின் பேரில் பணி நீக்கம் செய்வது அவசியம் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் தற்போது 1,282 ஊழியர்கள் பணி புரிவதுடன் அவர்களில் 300 பேரை சுய விருப்பின் பேரில் பணி நீக்கம் செய்வதற்கு 600 மில்லியன் ரூபா தேவைப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர், அது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேவைப்படும் 600 மில்லியன் ரூபாவில் 300 மில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொண்டு மீதம் 300 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக் கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் –

நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டுமுதல் 2021 ஆம் ஆண்டு வரை 632 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் நூற்றுக்கு 80 வீதமான ஊழியர்கள் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னரே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் ஓய்வு பெற்றமை மற்றும் ஊழியர்களின் தேவையை கருத்தில் கொண்டு 2020 − 2021 காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக 85 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒப்பந்த அடிப்படையில் பெருமளவிலான ஊழியர்கள் பல வருடங்களாக நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் நிலையில் அண்மையில் ஊழியர்கள் நிரந்தரமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கிங்ஸ் நெல்சன் எம்பி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் –

அது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்றும் விபரங்களைப் பெற்றுத் தந்தால் நிர்வாகத்தினருடன் அது தொடர்பில் பேசி அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: