திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்ய புதிய நடைமுறை!
Monday, October 3rd, 2016
இலங்கைப் பதிவாளர் நாயகத் திணைக்களம் திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இலங்கையில் சிறுவர் பரம்பரையின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிள்ளைகளினை பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெற்றோர் திருமணம் புரியாத சந்தர்ப்பத்தில் பிள்ளையின் பிறப்பினை பதிவு செய்யும் போது தந்தையின் பெயர் ‘தெரியாது’ என்பதற்குப் பதிலாக தாய் மற்றும் தகப்பன் இருவரினதும் விருப்பத்தின் பேரில் தகப்பனின் பெயரினை பிறப்புச்சான்றிதழில் உட்புகுத்துவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்திணைக்களத்தின் 07/2016 ஆம் இலக்க சுற்று நிருபம் சுட்டிக்காட்டுகின்றது.
மேலும் பிறப்பு, இறப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவினால் சட்டரீதியாக திருமணமாகாத ஜோடிகளுக்குப் பிறக்கும் பிள்ளையினது பிறப்பினை தகப்பனின் தகவல்களினை உட்புகுத்தி பதிவு செய்வதற்காக ஏற்பாடுகள் உள்ளன. பிள்ளையின் பிறப்பினை பதிவு செய்வதற்காக பெற்றோரின் விவாகச் சான்றிதழினை கட்டாயமான சான்றாகக் காட்டுவதனால் இவ்வாறான பிள்ளைகளின் பிறப்பினை பதிவு செய்வதனை தவிர்ப்பதற்கு அல்லது தந்தையின் தகவல்கள் இன்றி பதிவு செய்வதற்கு இடமுள்ளது.
ஆகையினால் திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகளின் பிறப்பினை பதிவு செய்வதற்கு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தாயுடன் தகப்பனையும் அழைப்பதற்கு அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.
பெற்றோர் இருவரும் இதற்காக தோற்றுவதன் காரணமாக பிள்ளையின் பிறப்புச் சான்றிதழுக்கு தகப்பனின் தகவல்களினை உட்புகுத்திப் பதிவு செய்வதற்கு இயலும் என கட்டாயமாக பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கிணங்க பிறப்புச் சான்றிதழில் 10 ஆவது நிரலில் தாய் மற்றும் தந்தையின் ஒப்பத்தினைப் பெறுவதோடு பிறப்புச்சான்றிதழின் 4 ஆவது நிரலில் தகப்பனின் தகவல்களை உட்புகுத்தி, 6 ஆவது நிரலில் இல்லை என குறிப்பிட்டு, 7 ஆவது நிரலில் தாய்வழி பாட்டனின் தகவல்களினை குறிப்பிட்டு, 8 ஆவது நிரலில் ‘தாய் இலங்கையில் பிறந்தவர்’ என அல்லது பொருத்தமான விதத்தில் தாய் வழிப்பூட்டனின் தகவல்களைக்
குறிப்பிட்டு 9 ஆவது நிரலில் பெற்றோர் இருவரினதும் பெயரினைக் குறிப்பிட்டு திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினைப் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக மாவட்ட பதிவாளர்கட்கும், அனைத்து பிறப்பு, இறப்பு மற்றும் வைத்திய பதிவாளர்கட்கும் பதிவாளர் நாயகம், ஈ.எம்.குணசேகர 07/2016 ஆம் இலக்க சுற்று நிருபத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


