தும்புசார் கைப்பணியாளர்களுக்கு விரைவில் தொழில் நுட்பப் பயிற்சி!

Wednesday, September 20th, 2017

வடக்கு மாகாணத்தில் தும்பு சார்ந்த உற்பத்திப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்குத் தும்புத் தொழிற்சாலைகளில் பணியாற்றவதற்கு ஏற்ற தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என மாகாண தொழிற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது – வடக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆயிரத்து 42 பேருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இது கைப்பணிப்பொருள் உற்பத்தி சார்ந்த பயிற்சிகளாகவும், சிறிய சுய தொழிலை மேற்கொள்ளக் கூடியதான குறுகிய காலப் பயிற்சிகளாகவும் உள்ளன. இந்தப் பயிற்சிகள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பயன்படும்.

தும்பு சார்ந்த உற்பத்திகள் திணைக்களத்தின் கீழ் உள்ள தொழிற்சாலைகளில் சிறப்பாக மேற்கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது மாகாணத்தில் தும்பு சார்ந்த உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மிகவும் குறைவு. ஆகவே தும்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளுவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கு இது அதிக வாய்ப்பினைப் பெற்றுத்தரும். குறிப்பாக தும்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தூரிகை சார்ந்த உற்பத்திகள் மக்களின் மத்தியில் தேவையாக உள்ளது. இதற்கு அமைவாக தும்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய நவீன இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.

தற்போது 22 பேருக்கு தும்பு உற்பத்தி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நவீன இயந்திரங்களைக் கையாளுவதற்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: