இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த எவரும் அனுமதி கிடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022

இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனத் கொலம்பகே அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை சீனாவின் பக்கம் சாய்கின்றது என்ற விமர்சங்களையும் நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை வரலாறு முழுவதும் சமமான உறவுகளை பேணிவந்துள்ளதுடன் நாங்கள் அதன் மூலம் நன்மையடைந்துள்ளோம்.

நாங்கள் முக்கியமான தருணங்களில் சில துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளோம்- உதாரணத்திற்கு சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை மீள ஏற்படுத்துதல் – இறப்பர் அரிசி உடன்படிக்கையில் கைசாத்திட்டமை – கச்சதீவை மீளப்பெற்றமை போன்ற நடவடிக்கைகள் இதற்கான உதாரணங்களாகும்.

எங்கள் வெளிவிவகார அமைச்சர் தனது நிபுணத்துவத்தை மேற்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளுடனான உறவுகளை பேணுவதில் மிகச்சிறந்த விதத்தில் செயற்பட்டுள்ளார்.

நடுநிலைமையை பேணுவதும் அதிகார போட்டியில் சிக்காமலிருப்பதுமே எங்கள் வெளிவிவகார கொள்கையின் முக்கிய உத்தரவு.

இதேநேரம் நாங்கள் எந்த பக்கமும் சாய்வதில்லை. நாங்கள் அனைவரினதும் நண்பர்கள் அனைத்து சிறந்த விடயங்களிற்கும் நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம்.

ஆனால் ஏனைய நாடுகளிற்கு இலங்கை தொடர்பான புவிசார் அரசியல் நோக்கங்கள் உள்ளன. அந்தவகையில் இந்தியப் பெருங்கடலின் இயக்கவியலை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும், யாரையும்; பகைத்துக்கொள்ள கூடாது.

எங்கள் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான எங்கள் முக்கிய கவனத்திற்குரிய விடயம் அனைவருடனும் ஈடுபாடுகளை கொண்டிருத்தலாகும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய சீன ஹங்கேரி பிரிட்டன் அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் அளவையும் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொள்ளும் போது அந்த நாட்டிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை.

அதேநேரம் இலங்கையை இந்தியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பது குறித்து ஜனாரிபதி மிகவும் உறுதியாக உள்ளார்.

இது எங்கள் அயல் நாடு. இதில் நாங்கள் ஸ்திரமானதாக இல்லையென்றால் நாங்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளநேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் சீனாவுடன் மாத்திரம் ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை, எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா எங்களிற்கு இன்னுமொரு 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. பங்களாதேஸ் கூட நாணயபரிமாற்றத்திற்கு இணங்கியுள்ளது. நாங்கள் எங்கள் நண்பர்களை ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

பெருந்தொற்று காரணமாக உருவாகியுள்ள முன்னொருபோதும் இல்லாத நிலைமை இது . வருடத்திற்கு 4.5 பில்லியன் டொலர்களை பெற்றுத்தந்த – மூன்று பில்லியன் மக்களிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிய சுற்றுலாத்துறை முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு இது பெரும் பாதிப்பாகும். ஆனால் சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் உயிர்பெறதொடங்கியுள்ளது.

ஆனால் நாங்கள் எங்கள் நண்பர்களிடம் தங்கியிருக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் ஏற்றுமதி வருமானங்கள் மீள கிடைக்க தொடங்கியுள்ளமை நல்ல அறிகுறியாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கின்ற வெளிநாட்டு வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கின்றது. கடந்த 73 வருடங்களாக எங்கள் பொருளாதார கொள்கையில் ஏதோ தவறு இடம்பெற்றிருக்கின்றது. பல பிரச்சினைகள் ஒன்றுசேர்ந்து தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

நாங்கள் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும், வர்த்தகங்களை கவரவேண்டும். அதிகாரிகள் மட்ட தலையீடுகளை நீக்கவேண்டும்.

கொழும்பு துறைமுகநகரம் சிறந்த உதாரணம், வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் மட்ட தலையீடுகளை தவிர்ப்பதற்கு அங்கு விசேட சட்டங்கள் உள்ளன.

ஆகவே நாங்கள் சீனா பக்கம் சாய்கின்றோம் என்பதில் உண்மையில்லை – எங்களிற்கு அதிகளவு தெரிவுகள் இல்லை. சர்வதேச சமூகம் எங்களிற்கு திட்டங்கள் முதலீடுகள் தொடர்பில் அதிகளவு தெரிவுகளை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .

Related posts:

சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறவில்லை - யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெ...
இயற்கை இடரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்க யாழ்.மாவட்டச் செயலகத்தினாலும்  நிவாரணப் பொருட்கள...
கொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி - பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு!