டெங்கு ஒழிப்பு தொடர்பான செயலணியை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

Wednesday, May 17th, 2017

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுதல் மற்றும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியை உடனடியாக கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இதன் பிரகாரம் டெங்கு ஒழிப்பு செயலணி ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் கூடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44,623 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 115 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2014 ஆண்டு டெங்கு நோயாளர்கள் 47,246 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், 97 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்தன. 2015 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்கள் 29,775 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட மரணங்கள் 60 ஆக வீழ்ச்சியடைந்திருந்தன.

2016 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததுடன், 55,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகினர். இதில் 90 டெங்கு மரணங்களும் பதிவாகியிருந்ததாக சுகாதார தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts: