நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு – பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகையிரத நிலையங்களில் இராணுவத்தினரும் கடமையில்!

Wednesday, September 13th, 2023

நாடளாவிய ரீதியாக உள்ள புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது 32 புகையிரத நிலையங்களில் இராணுவத்தினர் பொது மக்களின் பாதுகாப்புக்காக கடமையில் உள்ளனர்.

தேவை ஏற்படுமாயின் ஏனைய புகையிரத நிலையங்களிலும் பொலிசாரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக இராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகளும், புகையிரத பாதைகள் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து பேணுதலும் அத்தியாவசிய செயற்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: