சிறுபோகச் செய்கைக்கு ஆபத்து அரிசி விலை எகிறும் என அச்சம் !

Tuesday, February 20th, 2018

வடக்கு விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் பெருமளவு நெல்லை கொள்வனவு செய்கின்றனர். சிறுபோக விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தாலேயே அவர்கள் அதிக விலையிலும் நெல்லைக் கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலைமையால் எதிர்காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்வு கூறப்படுகின்றது.

கடந்த வருடம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு மாகாணத்தில் மழைவீழ்ச்சி குறைவாகவே காணப்பட்டது. சரியான காலத்தில் மழை பெய்யவில்லை. உரத் தட்டுப்பாடு, குளங்களில் தண்ணீர் இன்மை போன்ற காரணங்களால் பெரும்போகம் மிகவும் பாதிக்கப்பட்டது.

வறட்சியில் தப்பிப் பிழைத்த ஒரு சில நெல் இனங்களே பின்னர் பெய்த மழையால் தற்போது அறுவடை செய்யப்படுகின்றன. அறுவடை வடக்கு மாகாணத்தில் பெருமளவு இடங்களில் முடிவுற்றுள்ளது. அறுவடை செய்யும் நெல் வயல்களில் மூடையாகக் கட்டப்படும் போதே தனியார் அந்த நெல்லைக் கொள்வனவு செய்கின்றனர். தென்பகுதியில் இருந்து வரும் தனியார் அதிகம் வடக்கு நெல்லைக் கொள்வனவு செய்கின்றனர். விவசாயிகளும் தமது நெல்லை கூடிய விலைக்கு விற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் விற்பனை செய்கின்றனர். நெல்லுக்கான நியாய விலை பேணப்படவில்லை.

ஒவ்வொரு நெல் கொள்வனவாளர்களும் ஒவ்வொரு விலையில் நெல் கொள்வனவு செய்கின்றனர். நடப்பாண்டுக்கான சிறுபோக நெற்செய்கை நாடு முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எதிர்வரும் நாள்களில் அரிசியினுடைய விலை அதிகரிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கூடிய விலையிலும் தனியார் நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் விவசாயிகளின் விளைச்சலின் பெரும் பகுதியை நெல் சந்தைப்படுத்தும் சபையினரே கொள்வனவு செய்வர். ஆதற்கான நிர்ணய விலை மதிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்படும். இந்த முறை காலபோக நெல்லை தற்போது விவசாயிகளிடம் இருந்து நெல்லைப் பெறமுடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

800 மெற்றிக் தொன் எடை நெல்லை யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளோம் என்று நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையினர் தெரிவித்திருந்தனர். வன்னி பெருநிலப்பரப்பில் அதிகபடியான நெல் கொள்வனவுக்காக அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு நெல்லை வழங்க முன்னரே விவசாயிகள் நெல்லை தனியாருக்கு சந்தைப்படுத்தி விடுகின்றனர். நெல் சந்தைப்படுத்தும் சபையினர் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்கின்றனர். நாங்கள் அதைவிட அதிகமான விலையில் தனியாருக்குக் கொடுக்கின்றோம். கிளிநொச்சியைப் பொறுத்த வரையில், ஆட்டக்காரி ஒரு மூடை 3 ஆயிரத்து 300 ரூபாவுக்கும், சின்னச் சம்பா 3 ஆயிரத்து 500 ரூபாவுக்கும், சம்பா (பெரிது) 3 ஆயிரத்து 300 ரூபாவுக்கும், சிவப்பு கோரா 2 ஆயிரத்து 200 ரூபாவுக்கும் விற்பனை செய்கின்றோம். அதிகமான விவசாயிகள் நெல்லை விற்று விட்டார்கள். சிறுபோகத்திலும் பெரும் சிக்கல் ஏற்படும் என்றே கூறவேண்டும். கடந்த வறட்சியால் தற்போது குளங்களில் தண்ணீர் இல்லை. சிறுபோகம் இடம்பெறாது. அப்படி விதைத்தாலும் சொற்ப அளவிலேயே விதைக்க முடியும். அதனால் தனியார் அதிக விலையிலும் நெல்லைக் கொள்வனவு செய்கின்றனர் என்று கிளிநொச்சி விவசாயிகள் சிலர் தெரிவித்தனர்.

Related posts: