கைதி கொலை செய்யப்பட்டத தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கைதுசெய்ய உத்தரவு!

தடுப்புக்காவலில் இருந்த கைதி ஒருவர் 2012 ஆம் ஆண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நல்வரைக் கைதுசெய்து, வழக்கு தொடருமாறு சட்டமா அதிபர் இரகசிய பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக அப்போது கடமையாற்றிய பிரியந்த பண்டார மற்றும் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 3 அதிகாரிகளையும் கைதுசெய்யுமாறே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த குறித்த தமிழ் கைதி, பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்று குளமொன்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக சுன்னாகம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சடலத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு கையளித்திருந்தது.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸாரினால் நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இதுவொரு கொலை என நம்பக்கூடியவாறான சாட்சியங்கள் உள்ளதென இரகசிய பொலிஸார் சட்டமா அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சாட்சியங்களை ஆராய்ந்த சட்ட மாஅதிபர், குறித்த சந்தேகநபர்களை கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related posts:
|
|