இந்திய – இலங்கை வர்த்தக உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 15th, 2024

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் மற்றும் 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியச் சங்கம் (Sri Lanka India Society) நேற்று (14) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் உரையாற்றும்  போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோர் ​​பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விசேட விருந்தினராக கலந்துகொண்டார்.

இவ்விழாவில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது –

”இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மத மற்றும் கலாச்சார ரீதியான பாரிய பிணைப்பு உள்ளது. மேலும் நமது இரு நாடுகளுக்கும் பொதுவான பாரம்பரியமும் உள்ளது.

அத்துடன் நானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக கைச்சாத்திட்ட தொலைநோக்கு பிரகடனம் செயற்படுத்தப்படும் நிலையில் 75 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவது விசேட அம்சமாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவை பலப்படுத்தும்  ” தொலைநோக்கு அறிக்கை”யை  தொடர்ச்சியாக முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம்.

இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகள், இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பது, இரு நாடுகளுக்கும் பிரிட்டிஷ் சட்டக் கட்டமைப்பு இருப்பது போன்ற விடயங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை நாம் மறந்துவிட்டோம்.

அந்த உறவு கலாசார உறவுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மொஹஞ்சேதாரோ நாகரிக காலத்திலிருந்தே இந்தியாவில் இருந்து கப்பல்கள் இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகிறது.  

இதேவேளை இலங்கை ரூபா மற்றும் இந்திய ரூபாயின் பாவனை தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரே, கடந்த காலங்களில் மக்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்குப் பொதுவான நாணயத்தைப் பயன்படுத்தியதை இது காட்டுகிறது.

அதற்கேற்ப, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த நாம் இப்போது உழைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஆகிய அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்த வேண்டும்.

மேலும், தென்னிந்தியாவிற்கு வசதியாக இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன்படி, தென்கிழக்காசியா மற்றும் வங்காள விரிகுடாவின் பிராந்தியங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் திருகோணமலையின் மீள் அபிவிருத்தி தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

எனவே, எமது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடந்த வருடத்தில் முன்னெடுத்த  வேலைத் திட்டத்திற்காக இலங்கை – இந்தியச் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேலும் நாம் வெளியிட்டிருக்கும் இந்த “தொலைநோக்கு” அறிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.” எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கான உபகரணங்கள் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மகாணசபை உறுப்பினர் தவநாதன் அவ...
3 இலட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு - நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீச...
மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் - பிரதி சுகாதா...