இது மாங்காய்க்  காலம்…!

Monday, June 6th, 2016

எங்கள் கிராமங்களில்  வருடத்தில் அனைத்துக் காலப் பகுதியையும் ஏதாவது ஒரு சீசன் என்று சொல்லி அழைப்பது மரபு. பலாப்பழச் சீசன், மாம்பழச்  சீசன், வெள்ளரிப்பழச்  சீசன் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

தற்போது மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. மாம்பழம் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது வலிகாமம் பகுதி தான். கறுத்தக் கொழும்பான், விலாட், சேலன், அம்பலவி,  என மாங்கன்றுகளில் எத்தனை வகை….!! எத்தனை சுவை…!!! தற்போது மாங்காய்க் காலம் என்பதால் திருநெல்வேலி, மருதனார்மடம், சுன்னாகம் பொதுச் சந்தைகளிலும், குடாநாட்டின் பல பகுதிகளிலும் மாம்பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது. யாழ்ப்பாணத்துக் கறுத்தக் கொழும்பானுக்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்புக் காணப்படுகிறது.

அதுவும் வலிகாமத்தில்  தற்போது மாங்கன்றுகள் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். வசந்த காலம் ஆரம்பித்துள்ளதால் இப்போது மாங்கன்றுகள் துளிர்த்துக் கண்களுக்கு இதம் தருகின்றன. அவற்றில் குலை குலையாகத் தொங்கும் மாங்காய்களை பார்த்து இரசிப்பதே தனிச் சுகம் தான். பார்த்து இரசித்தால் மாத்திரம் போதுமா? ருசித்தால் அதில் எத்தனை இதம்…! சொல்லும் போதே நாவில் சுவை ஊறுகிறது.

காலம் செய்த கோலம் எம்மைப் பொறுப்புள்ள இளைஞர், யுவதிகளாய்  மாற்றினாலும், சொந்தவூரில் சொந்தங்கள் மகிழ்வுடன் வாழ்வதற்காய் திரைகடல் ஓடித் திரவியம் செல்ல வைத்தாலும் சிறு வயதில் அம்மா….அப்பாவுக்கு…. தெரியாமல் மாங்காயை நண்பர்களுடன் சேர்ந்து உப்புத் தூளுடன் சாப்பிட்ட காலங்களை மறக்கலாமா? ஒரு மாங்காயையே நான்கைந்து நண்பர்கள் கடிகடித்துச் சாப்பிட்ட ஞாபகங்களும் உண்டு.  மாங்காய்க் கொப்பில் ஊஞ்சல் கட்டி விளையாடிய ஞாபகங்களும், தூங்கி விளையாடிய ஞாபகங்களும் நேற்றுப் போலிருக்கிறது.

நவீன வாழ்க்கைச் சூழலில் தம்மை ஈடுபடுத்தியிருக்கும் இன்றைய சிறுவர்களில் எத்தனை பேருக்கு இந்தச் சுகமான அனுவங்கள் உண்டு என்றால் அது கேள்விக்குரிய விடயம் தான். கடந்து போன வாழ்க்கைப் பாதையில் எங்களுடைய இளைய தலைமுறை தொலைத்துக் கொண்டிருக்கின்ற  ஏராளமான சந்தோசங்களில் ஒன்றாக இதுவும் இருந்து விடக் கூடாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் கரிசனையுடன் செயற்படுவோம்.

b30881c6-8f3c-440f-b77f-6c6abf82a106

7bc1fc04-689c-454b-9fa4-506d4754982a

Related posts: