19 வது திருத்தச் சட்டத்தால் உருவான சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, October 22nd, 2020

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலினைப் பின்பற்றியதாக முன்னெடுக்கப்பட்டிருந்த 19 வது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட, சுயாதீனம் எனக் கூறிக் கொள்ளப்பட்ட ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? என்ற கேள்வி எழுகின்றது. இந்த நாட்டுக்கு பொருத்தமில்லாத வகையிலேயே இந்த ஆணைக்குழுக்கள் செயற்பட்டிருந்தன என்பது பலரும் அறிந்த விடயமாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்’து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் விடயத்தை எடுத்துக் கொண்டாலும், அது பாரியதொரு நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டு, இறுதியில் அந்தப் பதவி கடந்த ஆட்சிக் காலத்தின்போது எவ்வாறு செயற்படுத்தப்பட்டிருந்தது? என்பது பற்றியும் இப்போது விடயங்கள் வெளிப்பட்டு வருகின்றன.  அரசிலமைப்புச் சபையின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட இத்தகைய நியமனங்கள் மற்றும் செயற்பாடுகள் அந்தந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள், நாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய அமையவில்லை என்பதுடன், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலினைக் கொண்டிருந்தவர்கள், தங்களது கருத்துகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வரையில் சுயாதீன ஆணைக்குழுக்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து மறுசீரமைப்புகளையும் மேற்கொண்டு வந்திருந்தனர் என்றே தெரிய வந்திருந்தது.

ஆகக் கூடிய சுயாதீனம் கொண்டதும், நாடாளுமன்றத்துக்குக்கூட பொறுப்பு கூறாத சுயாதீன ஆணைக்குழுவாக செயற்பட்டிருந்ததுமான தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினர் செயற்பட்டிருந்த மிக மோசமான நிலைமை தொடர்பில் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். இதன் காரணமாக இந்த ஆணைக்குழு மக்கள் மத்தியில் நகைப்பிற்கு உட்பட்டும் இருந்தது. அதாவது, பக்கசார்பின் உச்ச கட்டத்திற்கே சென்று, இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் செயற்பட்டிருந்தார்.

கடந்த இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டும், முட்டுக் கொடுத்துக் கொண்டும், இன்னும் தீராதிருக்கின்ற தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என எமது மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி, அந்த ஆட்சியையே கொண்டு வந்ததாக கூக்குரல் இட்ட தமிழ்த் தேசிய அரசியல் கும்பல், இறுதிவரையில் ஒரு துரும்பையும் கூட அசைக்க முடியாமல், தங்களுக்கான சலுகை சுகங்களை மாத்திரம் பெற்று வாய் மூடிக் கிடந்தனர். இவர்கள் எமது மக்களுக்கு வாக்களித்ததைப் போல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் விடுவிப்பு, காணாமற்போனோர் பற்றிய விடயத்திற்கான தீர்வு போன்ற எதுவும் சாத்தியமாக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் - பூந்தோட்டத்தில் டக்ளஸ் எ...
எமது மக்கள் முழுமையான சுதந்திரம்பெற தமிழ்த் தலைமைகள் நியாயமாக உழைக்கவில்லை- டக்ளஸ் தேவானந்தா அவர்களத...
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!