13 ஆம் திருத்ச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, April 22nd, 2022

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21.04.2022) இடம்பெற்ற அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக பரவலாகப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக, தமிழ் மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய அமரர் அ. அமிர்தலிங்கம், மலையக மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் முஸ்லீம் மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய மர்ஹீம் எம்.எச்.எம். அஸ்ரப் ஆகியோர்,  சிறுபான்மை தேசிய இனங்களின் நலன்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறந்தது என்ற கருத்தினை வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் தற்போது,  சிறுபான்மை தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் உட்பட பெரும்பாலான  அரசியல் தரப்புக்கள், நிறைவேற்று அதிகார முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து வருகின்றன. தற்போதைய ஜனாதிபதியும் குறித்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில், ஈ. பி.டி.பி. ஆகிய எம்மைப் பொறுத்தவரையில், அரசியல் அமைப்பில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படினும், தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் ஆரம்பித்து படிப்படியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக ஈ.பி.டி.பி. கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: தேசத்தை கட்டியெழுப்ப அபிவிருத்தி - டக்ளஸ் தேவானந்தா
முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் : கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக பொறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா...