புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் பொதுப் பவனைக்கு வரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

பல மில்லியன் ரூபா செலவில் வவுனியா நகரப் பகுதியில் புதிதாக
பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தும் அது இதுவரை பொதுப்பாவனைக்கு வழங்கப்படாதிருக்கும் அவல நிலைக்கு தீர்வு தரப்படும் என கடற்தொழில் மற்றும் நீரியல் வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06) வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
இதன்போது வவுனியா பொருளாதார மத்திய நிலைய தொகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு கன மழைக்கு மத்தியில் வியாபாரிகள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பில் நேரில் பார்வையிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரிகள் – வவுனியா மாவட்டத்தின் பொதுமக்களதும் வியாபாரிகளதும் பாவனைக்காக சுமார் 292 மில்லியன் ரூபா நிதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது கட்டுமாணப் பணிகள் நிறைவற்றுள்ள போதிலும் இதுவரை பொதுப்பாவனைக்கு விடாது காணப்படுகின்றது.
இதனால் மாவட்டத்தின் மத்தியில் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் தற்காலிக சந்தைத் தொகுதியில் தமது வியாபார நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அவல நிலை காணப்படுகின்றது.
தற்போது நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படவதால் இங்கு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் முதற்கொண்டு பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொதுமக்கள் வரை பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதனால் தமது வியாபார நடவடிக்கைகளை இயல்பாக முன்னெடுப்பதற்கு குறித்த
பொருளாதார மத்திய நிலையத்தை பாவனைக்கு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
வியாபாரிகளது அவலங்களையும் பிரச்சினைகளையும் அவதானத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் பொருளாதார மத்திய நிலையத்தை பொதுப் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|