ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்தோம்!

Thursday, September 21st, 2017

யாழ்ப்பாணத்திற்கான பிரதான வீதியான ஏ ஒன்பது வீதியைப் புனரமைப்புச் செய்யும் திட்டத்தையும், காங்கேசன்துறை வரையான புகையிரதப் பாதையைப் புனரமைப்புச் செய்யவும்,

இடைப்பட்ட புகையிரத நிலையங்களை மீளக்கட்டி எழுப்பவும் திட்டங்கள் தீட்டி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் வெளிப்படுத்தியபோது, அப்போது எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள்; அத்திட்டங்களை எதிர்த்தார்கள்.

வீதியைப் புனரமைப்பதும், புகையிரதப் பாதையைப் புனரமைப்பதும், மக்களின் பயன்பாட்டுக்காக அல்ல என்றும், அது படையினருக்கே பயனுடையதாக இருக்கும் என்றும் விதண்டாவாதம் பேசினார்கள்.

இருண்டு கிடந்த வட மாகாணத்திற்கு லக்ஸபான மின்சாரத்தை இணைப்புச் செய்யும் கோரிக்கையை விடுத்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதும், அதையும் இராணுவத்தின் தேவைக்காகவே செய்வதாகக் கூறினார்கள்.

இவர்களின் விதண்டா வாதங்களைப் பொருட்படுத்தாமல் யுத்தத்தால் அழிந்த எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், எமது மக்களின் மீள் எழுச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து அந்தத் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்தோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

203ஆம் அத்தியாயமான மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அன்று யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதைகள் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படாத காங்கேசன்துறைக்கு, இப்போது புகையிரதப் பாதைகள் புனரமைப்புச் செய்யப்படத் தேவையில்லை என்றும் அங்கு மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பின்னரே புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தடைபோட முயற்சித்தார்கள்.

அந்தத் தடைகளை எதிர்கொண்டு முதலில் புகையிரதப் பாதை காங்கேசன்துறைவரை புனரமைக்கப்பட வேண்டும், புகையிரத நிலையம் அமையப்பெற வேண்டும், பின்னர் மீள் குடியேற்றங்களைக் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தி அங்கே மக்களை குடியமர்த்தலாம் என்றும் எமது அணுகுமுறைத் தந்திரோபாயத்தை நடைமுறைப் படுத்தினோம்.

அன்று நாம் கூறியது பின்னர் நிதர்ஷனமானது. அன்று அந்த முயற்சியை நாம் செய்யாமல் இருந்திருந்தால், இன்று இரண்டும் நடந்திருக்காது.

காங்கேசன்துறைக்கு புகையிரதமும் போயிருக்காது, மக்களை மீள் குடியேற்றும் நமவடிக்கையும் நடந்திருக்காது.

வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவுப்பாலமாகக் கருதப்படும் புகையிரதச் சேவையை அன்று மிக அதிகமாக பயன்படுத்தியவர்கள் இதே எதிர்ப்பரசியல் வாதிகளின் தலைவர்கள்தான். என்பதையும் நாம் மறந்திருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts:


அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10  மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்...
தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் ஈ.பி.டி.பி. யிடம் இருக்கிறது: சரவணையில் அமைச்சர் டக்ளஸ் தேவ...