வளங்களை இனங்கண்டு கைத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Wednesday, June 21st, 2017
கடந்த வருடத்தின் எமது ஏற்றுமதித் துறைகள் சார்ந்து அவதானிக்கின்றபோது, கைத்தொழிற்துறையைப் பொறுத்தமட்டில் 2015ஆம் ஆண்டில் அது 8,017.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, 2016ஆம் ஆண்டில் அது 7,940.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தையே – அதாவது, சற்று குறைந்த வருமானத்தையே ஈட்டித் தந்திருக்கின்றது. இந்த வகையில், எமது நாட்டின் கைத்தொழிற்துறை சார்ந்த அவதானிப்புகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியத் தேவை நிலவுகின்றது என்பது புலனாகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இவ்வடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்
எனவே, ஏற்கனவே எமது நாட்டில் இருந்து, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழிற் துறைகளையும், புதிய கைத்தொழிற்துறைகளையும், எமது நாட்டினது தேவை மற்றும் ஏற்றுமதிச் சந்தையின் தற்கால கேள்விகளுக்கு இணங்க இனங்கண்டு மீள செயற்படுத்தப்பட வேண்டியதும், உருவாக்கப்பட வேண்டியதும் கட்டாயமாகும்.
அந்த வகையில் இன்றைய நிலையில் பொருளாதார ரீதியில் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டு, வீடு, வீடு சார் கடன்கள் அதிகரித்தும், தனி நபர் வருமானம் குறைந்தும் காணப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே செயற்பட்டிருந்த கைத்தொழிற்துறைகளை மீள செயற்படுத்துவதற்கும், அங்குள்ள வளங்களை இனங்கண்டு மேலும் புதிய தொழிற்துறைகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்
Related posts:
|
|
|


