வரலாறுகளை பாடமாக கொண்டு சுபீட்சமான எதிர்காலத்திற்காக உழைப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 27th, 2016

கட்சியின் கொள்கையானது எமது உணர்வோடும், உழைப்போடும் ஒன்றாக கலந்துள்ள அதேவேளை, மக்கள் நலன்சார்ந்ததாக அமையவேண்டும். கடந்த காலங்களில் நாம் கரடு முரடான பாதையூடாகவும் உயிர்த் தியாகங்களினூடாகவும் மக்களுக்காக பயணித்து வெற்றிகண்டுள்ளோம் என்பதை வரலாறு இன்று பதிவிட்டுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணத்தை உள்ளடக்கிய கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

87 க்கு பிற்பட்ட காலத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்ட நடைமுறை யதார்த்த வழிமுறையிலான ஜனநாயக அரசியல் பாதையை கண்டு அச்சமுற்ற இதர தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் சுயநலன்களுக்காக நாம் எடுத்துக்கொண்ட இணக்க அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் திரிபுபடுத்தி எம்மை தவறானவர்களாக சித்தரித்து மக்களது வாக்குகளை அபகரித்து  தமக்கான அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக்கொண்டதுடன்  ஒட்டுண்ணிக்குழுவாக இருந்து மக்களது வாழ்வியலை உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களது சுயநலன்களால் தான் எமது மக்கள் வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலும் தமது வாழ்வுரிமையை இழந்ததுடன் பேரழிவையும் சந்தித்திரந்தனர். அத்துடன் மக்களின் வாழ்வியல் வசந்தங்களும்  அழிக்கப்பட்டன.

DSCF1801

நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டதாகவும் மக்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இவ்வாறான எமது மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக கடந்த காலங்களில் நாம் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருந்ததுடன் இதற்காக உயிர் தியாகங்களையும் கொடுத்துள்ளோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது தீர்வுத்திட்டத்தை ழுமையான ஆரம்பமாக கொண்டு எமது உரிமைப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும். இதனை ஒரு ஆரம்பமாக கொண்டு செயற்படுத்தி அதனை வளர்த்தெடப்பதனூடாகவே நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம்.

அதன் அடிப்படையிலேயே 13ஆவது திருத்தச்சட்டத்தை  நாம் இன்றுவரை பாதுகாத்து வந்ததன் காரணமாகத்தான் இன்றைய சூழ்நிலையிலும் ஒரு யதார்த்தபூர்வமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

DSCF1788

அன்று நாம் எடுத்துக்கொண்ட யதார்த்தபூர்வமான  அரசியல் கொள்கையை பல தசாப்தங்களாக தமது சுயநலன்களுக்காக தட்டிக்கழித்துவந்தவர்கள் இன்று அதனை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு வந்துள்ளனர். அதன் பிரகாரமாகவே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைமை பதவியையும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவியையும் மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களின் இணைத்தலைமை பதவிகளையும் பெற்றுள்ளனர். இவ்வாறான  உயர் பதவிகளை பெற்றுக்கொண்டவர்களால் எமது மக்களுக்கு கிடைக்கப்பெற்றுவரும் அபிவிருத்திகளின் அனுகூலங்களை பார்க்கும்போது வெறுமையாகவே காணப்படுகின்றது.

எமது சாணக்கியமான இணக்க அரசியல் நகர்வுகளை இதர தமிழ் அமைப்புகளும் தமிழ் கட்சிகளும் அப்போது ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று எமது மக்கள் சந்தித்த வரலாறுகாணாத உயிரழிவுகளையும் பேரவலங்களையம் தடுத்து நிறுத்தியிருந்திருக்க முடிந்திருக்கும்.

கறைபடிந்த கடந்தகால வரலாற்று பதிவுகளினூடாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களை இனிவரும் காலத்தின் சுபீட்சமான  வாழ்க்கைக்கான வரலாறுகளாக பதிவு செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டியது அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் எமது கட்சியின் நிலைப்பாடு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரளிவு படுத்தினார்.

Related posts:


தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை - டக்ளஸ் ...
இன சமத்துவத்தை வலுப்டுத்த  இளைஞர், யுவதிகளுக்கு வழி காட்டினோம் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!
யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட...