எமது மக்களின் வாழிடங்கள் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துக் கிடக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 10th, 2017

மிக மோசமான யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான வடக்கு மக்கள் மிக அதிகளவான தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களும் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துகிடக்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –

பல பாடசாலைகளில் மாணவர்கள் இன்றும் மர நிழல்களில் கல்வி கற்று வருகின்றனர். வீதிகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. கணவனை இழந்த பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வாழ்வாதாரத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படி வடக்கின் தேவைகள் நீண்டுகொண்டு செல்கின்றன. முழு வீச்சில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தாலும் கூட பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டால்தான் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நிலைமையே உள்ளது.

இத்தகைய நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பெருமளவு நிதி செலவு செய்யப்படாது திறைச் சேரிக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்ட போது பல மில்லியன்களை மாகாண சபை வங்கியில் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. எமது மக்கள் மிக மோசமான அடிப்படைத் தேவைகளின் குறைபாடுகளுடன் வாழ்ந்து வந்தும், எமது மக்களுக்காக அவை பயன்படுத்தப்படவில்லை.

2015 ஆம் ஆண்டும்; பெருமளவு நிதி திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்ட போது உடனடியாக அவற்றுக்கு கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

2014 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு அறிக்கையின் படி 1028 திணைக்களங்களுக்கு 2162 விடயங்களுக்காக செலவு செய்யப்பட்ட பல மில்லியன்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாகவே தற்போது வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசினால் ஒதுக்கப்படுகின்ற நிதி தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், ஆற்றலும், அக்கறையும், முயற்சிகளும் கொண்ட அரச அதிகாரிகள் பலர் இருந்தும், அக்கறையும், ஆளுமையும், முயற்சிகளுமற்ற அரசியல் தலைமைகளின் வினைத்திறனற்ற நிர்வாக வழிநடத்தல்களே இந்த நிலைக்குக் காரணமாகியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

எனவே, இத்தகைய அரசியல்வாதிகளின் மக்கள் நலன் சாராத செயற்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற – ஏற்கனவே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்க்கை நிலையினை எமது மக்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடிய வகையில் கட்டியெழுப்புவதற்கு போராட வேண்டியதொரு சூழலிலேயே நாம் இருக்கின்றோம்.

Related posts:

பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...
தேசிய கீதம், தேசிய கொடிக்கான முக்கியத்துவம் ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருப்பத...

பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது - டக்...
ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
அன்று நாட்டை பொறுப்பேற்க துணிவில்லாதவர்கள் இன்று பாதீட்டை பிழைகூறிக் கொண்டிருகின்றனர் - அமைச்சர் டக...