வடக்கில் சில தமிழ் அரசியல் வாதிகளால் மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடு  ஏற்படுத்தப்பட்டுள்ளது – செயலாளர் நாயகம்!

Wednesday, November 22nd, 2017

மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு மணலை விநியோகிக்கின்ற கறுப்புச் சந்தைகள் உருவாக்கப்பட்டு, எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீடமைப்புத் திட்டங்களில் கூட தடைகளை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு சில தமிழ் அரசியல்வாதிகளாலும் அவர்களுக்குத் துணை நிற்கின்ற சில அரச அதிகாரிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி, மண்டைதீவு, அரியாலை கிழக்கு, கிளிநொச்சியில் வன்னேரிக்குளத்தின் பின் பகுதி, அக்கராயன் ஆற்றுப் படுகை, சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி, கிளாலி கடற்கரைக் கிராமம், பூநகரி, குடமுருட்டி, கண்ணகைபுரம், முல்லைத்தீவு கொக்காவில், துணுக்காய், பழையமுறிகண்டி கிராமம், ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள பேராறு, மன்னகண்டல், மேளிவனம், கனகராயன் ஆறு, ஓலுமடு, தென்னியங்குளம், என வடக்கு மாகாணத்தில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் காரணமாக விவசாயப் பயிர்ச் செய்கைகள் பாதிப்புகளுக்கு உட்பட்டும், உவர் நீர் விவசாய நிலங்களுக்குள் நுழைந்தும், கடலரிப்புகளுக்கு காரணமாகியும் வருகின்றன.

அத்துடன், மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு மணலை விநியோகிக்கின்ற கறுப்புச் சந்தைகள் உருவாக்கப்பட்டு, எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீடமைப்புத் திட்டங்களில்கூட, ஏனைய கட்டுமாணப் பணிகள்கூட, தடைகளை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு, சில தமிழ் அரசியல்வாதிகளாலும், அவர்களுக்குத் துணை நிற்கின்ற சில அரச அதிகாரிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மவாட்டத்தில் முழங்காவில் உள்ளிட்ட பகுதிகள் அடங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிருந்த பெருந்தொகையிலான பெறுமதிமிக்க மரங்கள் வெட்டப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு கடத்தப்படுகின்ற செயற்பாடுகள் சர்வ சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய காடழிப்பு செயற்பாடுகளால் இருக்கின்ற குறிப்பிட்ட சில நீர்வள மூலங்களும் மலட்டுத் தன்மையையே எதிர்நோக்கிவரும் நிலையில், விவசாயத்தை நம்பி வாழுகின்ற எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில், எமது பகுதிகள் வறுமையில் முதல் இடங்களைப் பிடித்தக் கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்  என தெரிவித்துள்ளார்.

Related posts:


பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!