உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது – பாதீட்டு உரையில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 21st, 2020

உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது. கொவிட் 19 கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாத்திரம் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதும் முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதொன்றல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

உலகப் பொருளாதாரத்தில் நீடிக்கின்ற நிதி மூலதனத்தின் ஆதிக்கம் காரணமாக யூகத்தின் ஊடாக விரைவு இலாபம் பெறுகின்ற நிலைப்பாடு, பொருளாதார சமநிலையின்மையின் வளர்ச்சி, நுகர்வுமய கலாசாரத்தின் வளர்ச்சி, உழைக்கும் மக்களின் உயராத அல்லது வீழ்ச்சி கண்ட தொடர் மெய் ஊதியம், உழைப்பின் முறைசாரா மயமாக்கலின் தற்காலிகமாக்கப்பட்ட உலகளாவிய பரவல், கடன் சுமையால் பாதிப்புறுகின்ற குடும்பங்களின் அதிகரித்த எண்ணிக்கை, நில அபகரிப்பு, இயற்கையின் பண்டமயமாக்கலின் தீவிரம் போன்றவை காரணமாக உலகப் பொருளாதாரமானது ஏற்கனவே அதாவது 2009 ஆம் ஆண்டிலிருந்தே ஓரிடத்தில் தேங்கி நிற்கின்ற நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்டிருந்த ஆய்வின்படி, 1800 ஆம் ஆண்டிலிருந்து 1950 ஆம் ஆண்டு வரையிலான 150 வருட காலகட்டத்தினுள் உலகப் பொருளாதாரமானது மிகவும் மந்த நிலையிலே வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அதாவது, 1950 ஆம் ஆண்டின் பின்னர் மிக வேகமான வளர்ச்சியைப் பெற்றது என்றும் 2008 ஆம் ஆண்டு வரையில் இது நீடித்தது என்றும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓரிடத்தில் தேங்கி நிற்கின்ற நிலைiயை அடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், கடந்த 5 வருடங்களை எடுத்துக் கொண்டால் பொருளாதார வளர்ச்சியானது 5 வீதத்தை எட்டவில்லை என்றே கூற வேண்டும். அதாவது 3 வீதத்திற்கும் நான்கு வீதத்தி;றகும் இடையிலான வளர்ச்சியினையே கொண்டிருந்தது. 2019ஆம் ஆண்டாகின்றபோது எமது நாட்டு பொருளாதார வளர்ச்சியானது 2.3 வீதம் என்கின்ற கடும் வீழ்ச்சி நிலையைக் காட்டி நின்றது.

இத்தகைய நிலையில் உலகளாவிய கொவிட் 19 கொரோனா தொற்று அனர்த்தம் ஏற்பட்டு, அது தற்போது, பிரபல அறிஞர் மைக் டேவிஸ் (Mike Davis) கூறுவதைப் போல், ‘கொவிட் 19 கொரோனா தொற்று நமக்கு நன்கு பழக்கப்பட்ட பூதமாக முன் கதவுக்கூடாக நுழைகின்றது’ என்ற நிலையில் உலக நாடுகளுடன் சேர்த்து நாமும் இருந்து வருகின்றோம். 

இத்தகைய நிலையிலிருந்து நாம் எப்படி மீள்வது? என்ற கேள்வி எம்முன் எழுகின்றது. பொருளாதார வளர்ச்சியானது நல்ல நிலையில் இருந்து, ஒரு தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக பொருளாதார ரீதியில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டால், ஆங்கில V எழுத்துப் போன்று வீழ்ந்து உடனடியாக எழுந்திருக்க முடியும். ஆனால், பொருளாதார வீழ்ச்சி நிலையில் இத்தகையதொரு அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால், ஆங்கில U எழுத்துப் போன்று அந்த வீழ்ச்சியுடன் சில காலம் இருந்து பின்னர் எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்பதை பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனவே, பொருளாதார வீழ்ச்சியுடன் இருக்க வேண்டிய சில காலத்தை நீண்டு செல்லவிடக் கூடாது. அதனை மிகக் குறுகிய காலகட்டமாக்குதல் வேண்டும். அதற்கென இறக்குமதி பராமரிப்பில் தங்கியிருக்காத, கடன் பளுவில் தொடர்ந்தும் தங்கியிருக்காத, அதீத நுகர்வுக் கலாசாரத்தைக் கொண்டிராத, சுய உற்பத்திப் பொருளாதாரத்தை நம்பியதான நிலையின் மேம்பாட்டின்பால் நாம் செல்ல வேண்டும். அதுவும், தற்போதைய நிலையில் ஆரம்ப கட்டமாக தேசியத் தேவைகளை கருத்தில் கொண்டதாக இது அமைதல் வேண்டும். ஏனெனில், சர்வதேச தேவைகளை நம்பக்கூடிய சூழ்நிலை இன்னும் காலதாமதமாகலாம். எனவே, தேசிய தேவைகளில் போதியளவு தன்னிறைவு காணும் வகையில் எமது தேசிய உற்பத்தித்துறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே நான் சுட்டிக் காட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:

யுத்த வெற்றி இல்லை என்பதுடன் தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்.! ...
கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - கட்சியின் செயற்பாட...
கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...