வடக்கில் கடல்வளம் சுரண்டப்ப டுகின்றது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 24th, 2017

வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய நீர்ப்பரப்புகளாக விளங்குகின்ற மன்னார் தென் குடா கடல், பாக்கு நீரிணை போன்ற சிறிய கடற்பரப்புகளைக் கொண்டதான கடற்பரப்பு பாரிய வளச் சுரண்டல்களுக்கு உட்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழிற் செய்கைகள் ஒருபுறமும், சில உள்ளூர் கடற்றொழிலாளர்களின் அழிவுதரக்கூடிய தொழில் செய்கைகள் ஒரு புறமும் என அப்பகுதி கடல் வளம் நாளுக்கு நாள் சுரண்டப்படுவது தற்போது அதிகரித்து வருவதாகவும், இப்பகுதியில் 1 கிலோ கிராம் இறால் உற்பத்திக்காக 18 கிலோ கிராம் சிறிய ரக மீன்கள் அழிக்கப்படுவதாகவும், இதன்படி ஒரு வருடத்தில் சுமார் 6.5 கோடி கிலோ கிராம் மீன்கள் அழிக்கப்படுவதாகவும், இதன் பெறுமதி சுமார் 6,510 மில்லியன் எனவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலளாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (23) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தொடர்பான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வடபகுதியில் சில கடற்றொழிலாளர்களது இழுவை மடி மூலமான தொழில்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் சில தமிழ் அரசியலவாதிகளின்; தலையீடுகள் காரணமாக அது தடைப்பட்டுள்ளதாகவும், இழுவை மடிகள் மட்டுமல்லாது, தடைசெய்யப்பட்ட அழிவு தரக்கூடிய கடற்றொழில் முறைமைகளான டைனமைற் மற்றும் கண்டல் மரக் குற்றிகளையும், ஆபத்தான பொருட்களையும் கடலில் பரவலாக அமிழ்த்தியும், மன் மூடைகள் மற்றும் கூரான இரும்புக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பொறிகளை கடலில் அமைத்தும், தொழில் செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.

Related posts:

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - செயலாளர் நாயகம் ட...
நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிக ஈடுபாடுகளைக் கொள்வதற்கு  உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!