இனப்பிரச்சினையைத் தீர்க்க உண்மையில் சம்பந்தன் விரும்புகின்றாரா? –  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, February 4th, 2017

சம்பந்தன் அன்று மகிந்த ராஜபக்ச அரசோடு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால், மோசமடைந்து கொண்டிருந்த யுத்தச் சூழலைத் தடுத்து நிறுத்தி அரசாங்கத்தை ஒரு பேச்சுவார்த்தைக்கு திசை திருப்பியிருக்கலாம். புலிகளும் ஒரு கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் அந்தக் கொலைக் களத்தில் அகப்பட்டு பலியாகி இருக்கமாட்டார்கள். அதைச் செய்யாத சம்பந்தனுக்கு இன்று பிறந்திருப்பது சுடலை ஞானமா? அல்லது காலம் கடந்த ஞானமா? என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது –

‘இனவாத துவேஷத்தை எழுப்பாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உதவ வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் நுகேகொடையில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ‘தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தரப்பை நான் அழைத்தேன். அவர்களோ வெளி நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டதால் எனது அழைப்பை நிராகரித்தார்கள்’ என்று கூறியிருக்கின்றார்.

சம்பந்தன் அவர்கள் உண்மையிலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண்பதற்கு விரும்பியிருந்தால், அதற்கான பேச்சுவார்த்தைகளை யுத்தம் முடிவுக்கு வந்தபோதே ஆரம்பித்திருக்கலாம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்தபோது சம்பந்தன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றைய ஜனாதிபதி அவர்களும் அன்றைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் இருந்தார்.

2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு தேவைப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுப்போம் என்று நான் கூட்டமைப்பினரை அழைத்தேன்.

அப்போது நான் மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த காரணத்தினால் கூட்டமைப்பினரை மகிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்கின்றேன் என்று கேட்டிருந்தேன். அப்போது சம்பந்தன் ‘பார்ப்போம்’ என்று கூறி எனது கோரிக்கையை தட்டிக்கழித்தார்.

அன்று சம்பந்தன் மகிந்த ராஜபக்ச அரசோடு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால், மோசமடைந்து கொண்டிருந்த யுத்தச் சூழலைத் தடுத்து நிறுத்தி அரசாங்கத்தை ஒரு பேச்சுவார்த்தைக்கு திசை திருப்பியிருக்கலாம்.

புலிகளும் ஒரு கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் அந்தக் கொலைக் களத்தில் அகப்பட்டு பலியாகி இருக்கமாட்டார்கள்.அதைச் செய்யாத சம்பந்தனுக்கு இன்று பிறந்திருப்பது சுடலை ஞானமா? அல்லது காலம் கடந்த ஞானமா?

இப்போது கூட தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசிடமிருந்து எவ்விதமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, மகிந்தவுக்கு சம்பந்தன் அழைப்புவிடுக்கின்றார் என்று தெரியவில்லை. அதை பகிரங்கமாக அவர் கூறப்போவதுமில்லை.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கான விருப்பமும், முயற்சியும் உண்மையாக இருக்குமானால், அதற்கான புறச்சூழலை சிங்கள மக்களிடம் உருவாக்கவதற்கும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால்,பிரச்சினையோடு தொடர்புபட்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் பொதுத் தீர்மானத்தை ஏற்படுத்துவதற்கும் சம்பந்தன் முன்வர வேண்டும். அதைச் செய்யாமல் மகிந்தவுக்கு அழைப்பு விடுவதும்.கணிப்புக் கதைகளைக் கூறுவதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை ஒருபோதும் கொண்டுவராது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

DSCF0271-300x225

Related posts:


நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - நாடாளுமன்றில டக்ளஸ...
கட்சிக் கொள்கையுடன் எமது உறுப்பினர்கள் வேலைத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றனர் – டக்ளஸ் எம்.பி. தெ...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...