யுத்தத்தை வென்ற போதும் தமிழ் மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்படவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 8th, 2017

யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறும் வகையில் ஒரு பொதுவான நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப் படுத்துவதற்குமாகவே மேற்படித் தனி நபர் பிரேரணை என்னால் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் நான் இதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த நிலையில், அது அக்கால கட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டும், நிறைவேற்றப்படாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும், எமது மக்களின் உணர்வுப்பூர்வமான விடயங்கள் உட்பட பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படாமை மற்றும் சிறுபான்மையின மக்களை அவதானத்தில் கொள்ளாது செயற்பட்டதன் விளைவாகவே, இந்த ஆட்சிக்கு வித்திட்டது. ‘யுத்தத்தை வெற்றி கொண்ட நாம் தமிழ் மக்களது மனங்களை வெல்லவில்லை’ என தனது ஆரம்ப சுதந்திர தின உரையில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி அவர்களினதும், தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வெண்டும் என்ற முனைப்போடு செயற்படுகின்ற பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களினதும் தலைமையில் இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கச் செய்றபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் இதனை நான் இங்கு முன்வைத்துள்ளேன்.

எமது மக்கள் தங்களது உறவுகளை கடந்த கால யுத்தத்தில் பறிகொடுத்துவிட்டு, அந்த உயிர்களின் ஆத்ம சாந்தி வேண்டி, மதச் சடங்குகளை மேற்கொண்டு, அவர்களை நினைவு கூறுவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர் என்பதை யாவரும் அறிவீர்கள். இருப்பினும், பறிபோன உறவுகளுக்கு நினைவு கூறுவதை சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது சுயலாப அரசியல் கருதி அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். ஒரு விளக்கை ஏற்றிவிட்டு, தங்களது அரசியலை அந்த துன்பகரமான இடத்தில் அரங்கேற்றுகின்ற அசிங்கங்கள் அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு காவல்த்துறையினர் பாதுகாப்பும் வழங்குகிறார்கள்.

இவ்வாறான எமது மக்களது உணர்வு ரீதியிலான பாதிப்புகளை தொடர்ந்தும் வளர்த்தெடுத்து, அதனை ஒரு வெறுப்பாக எங்கள் மக்கள் மத்தியில் குடியிருத்தாமல், அந்த மக்களை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு என நான் நம்புகின்றேன். எனவே, உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு உரிய வகையில் ஒரு பொதுத் தூபி ஒன்றை அமைப்பற்கும், அதற்கென ஒரு திகதியை குறித்தொதுக்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதனை இந்த அரசு மேற்கொள்ளுமிடத்து, இந்த அரசு மீது எமது மக்களின் நம்பிக்கைகள் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

யுத்தத்தால் கொல்லப்பட்ட உறவுகளை எமது மக்கள் நினைவுகூறுகின்ற விடயமானது, சில இனவாதிகளால் புலிகளை நினைவு கூறுவதற்காக சித்தரிக்கப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவுகூறுவதற்காக புலிகள் இயக்கத்தினர் நவம்பர் மாதத்தில் 28ஆம் திகதியை ஒதுக்கியிருந்தனர். அது வேறு. இங்கு நான் கோருவது கடந்தகால யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை எமது மக்கள் நினைவு கூறும் வகையில் மே மாதத்தில் ஒரு தினத்தையே குறித்தொதுக்கும்படிக் கோருகின்றேன். அதுவும், யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது நாட்டின் அனைத்து மக்களையும் நினைவு கூறத்தக்க வகையிலேயே இது அமைய வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

சட்டவிரோத மண் விநியோகத்தை ஊக்குவிப்பவர்களே துன்னாலை இளைஞனின் மரணத்திற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.
யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் த...
அத்துமீறும் கடலட்டை பிடிப்பு விவகாரத்துக்குக் கிடைத்தது தீர்வு - கடற்றொழில் அமைச்சருடன் தமிழ் நாடாளு...