கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற்படுத்த முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, June 21st, 2019

800 மில்லியன் ரூபா செலவில், கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேரமன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் நிறுவப்பட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு யூலை மாதம் திறந்து வைக்கப்பட்ட இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் திறமையற்ற நிர்வாகம் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக மூடப்படுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்த பயிற்சி நிறுவனமானது, நவீன வசதிகளுடன் கூடிய துறைசார் விரிவுரை மண்டபங்கள், வெளி மாவட்ட மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் ஆகியவற்றைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், திட்டமிட்ட தவணைப் பரீட்சைகள்கூட நேர சூசிக்கு அமைவாக நடைபெறுவதில்லை என்றும், நடைபெறுகின்ற பரீட்சைகளின் பெறுபேறுகள்கூட ஆறு மாதங்களின் பின்னரே மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக சித்தி பெறாத மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், கடந்த மூன்று வருட காலமாக இயங்கி வருகின்ற மேற்படி பயிற்சி நிலையத்தில் NVQ  தரம் 5 ஐ பூர்த்தி செய்துள்ள எந்தத் திணைக்கள மாணவர்களுக்கும் இதுவரையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும், NVQ தரம் 4 ஐ பூர்த்தி செய்துள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களில் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்றதற்கான குறியீடோ, சொல்லோ இல்லை என்றும், இதனால் தாங்களாகவே தொழில் வாய்ப்புகளைத் தேட முயற்சிக்கின்ற மாணவர்களுக்குக்கூட தொழில் வாய்ப்புகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

90 விரிவுரையாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பயிற்சி நிலையத்தில் தற்போது 40 விரிவுரையாளர்களே பணியாற்றி வருவதாகவும், இத்தகைய பிரச்சினைகள் காரணமாக எஞ்சியிருந்த 50 வீத மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளைக் கைவிட்டுள்ளனர் என்றும் மேலும் தெரிய வருகின்றது.

மேற்படி இலங்கை – ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு தடையேற்படாத வகையில், அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றினை விரைவாக ஏற்படுத்த முடியுமா?

மேற்படி பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அம்மாணவர்கள் தாமாகவே தொழில் வாய்ப்புகளைத் தேடிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் சான்றிதழ்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியாதா?

மேற்படி பயிற்சி நிலையத்தின் ஆளணிப் பற்றாக்குறையை உடனடியாகப் பூர்த்தி செய்ய முடியுமா?

மேற்படி பயிற்சி நிலையத்தை மூடிவிடக்கூடிய நோக்கங்கள் ஏதும் அரசாங்கத்திற்கு இருக்கின்றதா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது கைத்தொழில் அபிவிருத்தி, வாணிப, நீண்ட கால இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி பதில் அமைச்சர் புத்திக பத்திரன அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா உறுதி!
'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' - அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...