யுத்த அழிவிலிருந்து மீண்ட மக்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவேன் – முல்லை. மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா !

அவலப்பட்ட நிர்க்கதியான எமது மக்களுக்கு நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்கும் நோக்கத்துடனேயே நாம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஆரம்பித்தோமே தவிர பத்தோடு பதினொன்றாகவோ சுயலாபங்களுக்காகவோ அல்ல என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்ட மக்களுடனான இன்றைய(12) சந்திப்பின்போது உறுதிபடத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஈழ விடுதலை போராட்டத்தின் 80 களின் ஆரம்பத்தில் களப்பலியான முதலாவது பெண்போராளி எனது உடன் பிறந்த சகோதரி என்பதே மறைக்கப்படமுடியாத உண்மையாகும். இதேபோன்று உடன்பிறந்த மற்றொரு சகோதரரையும் இந்த விடுதலைப்போராட்ட பயணத்தில் இழந்துள்ளேன். ஆகையினால் போரினால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் அதனால் ஏற்படக்கூடிய இழப்பகளையும் வலிகளையும் நான் நன்கறிவேன்.
1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல் எத்தனையோ அரிய சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் எமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் தவறான அரசியல் தலைமைகளின் வழிநடத்தல்களினால் அவை பயனற்றுப் போயிருந்தமை மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச தலையீட்டுடன் தீர்வு காணப்படக்கூடியதான சூழல்கள் தோற்றுவிக்கப்பட்ட பொழுதிலும் அவையும் சுயலாப அரசியலுக்காக செயலிழக்கச் செய்யப்பட்டதையும் இங்கு நினைவு கூர விரும்புகின்றேன்.
நாம் தேர்தல் காலங்களிலும் சரி எக்காலத்திலும் சரி நடைமுறைச்சாத்தியமாகாத வாக்குறுதிகளை எமது மக்களுக்கு ஒருபோதும் வழங்கியது கிடையாது. தேர்தல் காலங்களில் நாம் ஈட்டிக்கொள்ளும் வெற்றிகள் எல்லாம் மக்களின் வெற்றிகளாகவே எண்ணி கிடைக்கப்பெற்ற சந்தர்ப்ங்களையும் வாய்ப்புகளையும் மக்கள் நலன்சார்ந்தே முன்னெடுத்த வந்திருக்கின்றோம்.
யுத்தத்தினால் அழிவையும் பாதிப்பையும் சந்தித்த குடாநாட்டை நாம் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருக்கின்றோம். அதற்கான சான்றுகளை எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் ஊடான யாழ். மாவட்டத்தின் இன்றுள்ள கம்பீரத் தோற்றம் சாட்சி பகர்கின்றது.
இவ்வாறான அபிவிருத்திகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு அரசியல் பலம் என்பது மிகவும் அத்தியாவசியமானதென்பதையும் இங்கு தெளிவுபடுத்த விரும்பகின்றேன்.
மக்களின் வாக்குகளை சுரண்டியவர்கள் மத்தியிலும் சரி மாகாணத்திலும் சரி கிடைக்கப்பெற்ற உயர் பதவிகளைக்கொண்டு எதையும் சாதிக்காமல் இருப்பதனூடாக மக்கள் மீதான அவர்களது அக்கறையற்ற தன்மையையே உணர்த்தி நிற்கின்றது.
எனவே எதிர்காலங்களில் மக்கள் சரியானவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யும் பட்சத்தில் யுத்தத்தினால் பேரழிவுகளையும் பாதிப்புகளையும் சந்தித்திருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டுமானப்பணிகளை மட்டுமல்லாது மக்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தமுடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்பதை ஆணித்தனமாக கூறிவைக்க விரும்பகின்றேன் எனவும் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத்தெரிவித்தார்.
Related posts:
|
|