மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் நல்லுறவும் அவசியம் -டக்ளஸ் எம்.பி. விலியுறுத்து!

Monday, March 4th, 2019

மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் இருக்கும் நல்லுறவையும் சிதைப்பதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான சம்பவங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அந்தவகையில் இலங்கைத் தீவில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமை பெற்றவர்களாக பேதங்களற்று வாழவேண்டும் என்பதே எமது விருப்பமும் நிலைப்பாடும் ஆகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது நாடு தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள், பறங்கியர்கள் ஆகிய அனைத்து இன மக்களும் சொந்தமென்று கூறி உரிமையோடு வாழவேண்டிய நாடு. இந்துக்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், பௌத்தர்களும் சகோதர மக்களாக ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் மனித நேயத்துடன் வாழவேண்டிய மதசார்பற்ற நாடு. இனங்களையும் மதங்களையும் பிரதேசங்களையும் மனித நேயமே ஒரு நாடு என்ற வகையில் ஒன்று சேர்க்கின்றது. ஆனால் அரசியல் மட்டும்தான் அவற்றைப் பிரித்து வைக்கிறது.

இந்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருவதுடன் அவ்வாறான நல்லிணக்கத்திற்கு பல முயற்சிகளையும் நாம் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்திருக்கின்றோம்.

தமிழ் பேசும் மக்களின் பெயரால் தமிழ் பேசும் மக்களையே தினம் தினம் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாக்கிவரும் எமது தேசத்தில் இந்துக்களின் சிறப்புமிக்க வழிபாடு நடைபெறும் இத்தருணத்தில் நடந்தேறியுள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வளைவு இடித்தழிக்கப்பட்டமை மற்றும் திருக்கோணேஸ்வரர் ஆலய சிவலிங்கம் உடைக்கப்பட்டமை ஆகியன துரதிஷ்டவசமானதொன்றாகும் என்றே கவலையடைகின்றேன்.

மதத்தால் வேறுபட்டாலும் பேசும் மொழியாலும் வாழும் நிலத்தாலும் ஒன்றுபட்டவர்களே தமிழ் பேசும் மக்கள். அந்தவகையில் இந்தச் சம்பவம் நடைபெற்றதற்கான உண்மைகள் கண்டறியப்பட்டு அதற்கான தீர்வு  காணப்படவேண்டும். இதற்கான முயற்சிகளை அரசியல் சாரா வகையில் முன்னெடுத்து இந்துமதத்தினது புனிதத்தன்மை பாதுகாக்கப்படுவதுடன் கத்தோலிக்க மத மக்கள் மீது சுமத்தப்படும் பழிகளுக்கும் தெளிவு பெற்றுக்கொடுத்து மதங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

கிறிஸ்தவர்களது பைபிளோ, பௌத்தர்களின் மஹாவம்சமோ, இஸ்லாமியரின் குர்ரானோ மற்றும் இந்துக்களின் பகவத் கீதையோ நல்லிணக்கத்தையும் சமத்தவத்தையும் தனித்துவத்தையும் வலியுறுத்தி நிற்கின்றன என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். அந்தவகையிலேயே நாமும் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி அதற்காக அயராது உழைத்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? - கல்வி...
கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!
அமைச்சர் டக்ளஸ் காத்திரமான நடவடிக்கை - வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்ப...

அபிவிருத்தியை சலுகை என்றுஎதிர்த்தவர்கள் அடிக்கல் நாட்டுகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெ...
நிலையான ஆட்சிக்கு வாய்ப்பில்லையேல் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுங்கள் - சபையில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை...
இந்திய அரசின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க நடவடிக்கை ...