மக்களின் தேவைகளை நிறைவேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்துக்காக அல்ல- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 6th, 2016

எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒரே காரணத்துக்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளோமே அன்றி, சுய நலமான அரசியல் தேவைகளுக்காக நாம் ஒருபோதும் எமது மக்கள் எமக்களித்துள்ள அரசியல் ஆணையைப் பயன்படுத்தியது கிடையாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சுத் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

எமது மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எமது மக்களுக்கான அடிப்படை மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் நான் தொடர்ந்தும் இந்தச் சபையிலே கௌரவ அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் வலியுறுத்தி வந்துள்ளேன். அந்த வகையில் எனது கோரிக்கைகளையும் ஏற்றுப் பல்வேறு விடயங்களை எமது மக்களின் நலன் கருதிச் செய்துகொடுத்துள்ள கௌரவ அமைச்சர் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், மேலும் ஒரு சில விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்த வகையில் வடக்கில் மேலும் பல ஏக்கர் எமது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என்ற கொள்கை அடிப்படையில் நாம் செயற்பட்டு வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் எமது அரசியல் பலத்திற்கு உட்பட்ட வகையில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணிகளை நாம் விடுவித்துக் கொடுத்திருந்தோம்.

எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒரே காரணத்துக்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளோமே அன்றி, சுய நலமான அரசியல் தேவைகளுக்காக நாம் ஒருபோதும் எமது மக்கள் எமக்களித்துள்ள அரசியல் ஆணையைப் பயன்படுத்தியது கிடையாது.

அந்த நிலையில், யுத்தத்தில் நேரடியாகப் பங்கெடுத்து வந்துள்ள – மற்றும் யுத்தத்தில் வெற்றிபெற்ற அரசுகளுடனேயே இணக்க அரசியல் நடத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டு இருந்தது. அவ்வாறு அக்கால கட்டங்களில் இந்த இணக்க அரசியலில் பங்கெடுத்து வந்ததன் காரணமாகவே எமது மக்களின் இழப்புகளைப் பல மடங்கு குறைத்துக் கொள்ள இயலுமாகவும் இருந்தது. மாறாக, மக்களை உசுப்பேத்தி அதன் மூலம் சுயலாப அரசியல் நடத்தும் ஏனைய தமிழ்க் கட்சிகளைப்போல் நாமும் செயற்பட்டிருந்தால் எமது மக்களின் அழிவு ஏற்பட்ட அழிவைவிட மிக பாரியதாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன், எமக்கிருந்த குறிப்பிட்டளவு அரசியல் அதிகாரத்தைக் கொண்டும், அக்கால கட்டங்களில் நிறைய இடங்களில் நிலக்கன்னி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்ததாலும், எம்மால் முடிந்தளவிலான காணிகளை வடக்கு மாகாணத்தில் பரவலாக விடுவித்து எமது மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கியிருந்தோம்.

அதன் பின்னரான காலகட்டத்தில், மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும், கௌரவ பிரதமர் அவர்களும், தாங்களும் இந்தக் காணிகளைப் படிப்படியாக விடுவித்து வருவது பாராட்டத்தக்க விடயமாகும்.

இந்த நிலைப்பாட்டினைத் தொடர்ந்தும் முன்னெடுத்து, யாழ் மாவட்டத்தில் இன்னமும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்ற அனைத்து மக்களுக்கும், இடம்பெயர்ந்த நிலையில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், வாடகை வீடுகளில் இருக்கும் மக்களுக்கும் அவர்களது காணிகளை விடுவிப்பதற்கும், அவர்களுக்கான மீள்குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக, வலிகாமம் வடக்கு குடியிருப்புக் காணிகள், விவசாய மற்றும் கடல் தொழில்சார் கேந்திர இடங்கள் எனப் பல நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. அதே நேரம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு காணிகளில் சில தற்போது விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. அண்மையில் அப்பகுதிக்குச் சென்று, அம் மக்களின் துயரங்களை அறிந்து, அது பற்றி நான் அரசுடன் கதைத்திருப்பதற்கு பயன் கிடைத்துள்ளதாகவே அறிகின்றேன். அதற்கும் எனது நன்றியினைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு, அங்குள்ள சூரிபுரம் மயானத்தையும் எமது மக்களின் பயன்பாட்டுக்கு விடுவித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிலும் பல காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலும் இதே நிலையே உள்ளது என்பதையும் தங்களது அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த நிலையில், இந்திய அகதி முகாம்களிலிருந்து நாடு திரும்பும் மக்கள் தொடர்பில் நான் இதற்கு முன்னர் பல தடவைகள் பல்வேறு விடயங்களை வலியுறுத்தியிருந்தேன். அந்த வகையில் இம் மக்கள் நாடு திரும்புவதிலுள்ள பல்வேறு நெருக்கடிகளை கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும், கௌரவ உள்ளக விவகார அமைச்சர் எஸ். பி. நாவின்ன அவர்களும் முன்வந்து நீக்கியிருப்பது தொடர்பில் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அம் மக்கள் நாடு திரும்பிய நிலையில், பல்வேறு தேவைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவே இன்னும் கூறப்படுகின்றது.

குறிப்பாக, இம்மக்கள் நாடு திரும்பி நான்கு வருடங்கள் கழிந்த நிலையிலும், இவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள், வேலை வாய்ப்பு, உலர் உணவுத் திட்டங்கள் என்பன இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று இவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பில் உடனடி அவதானங்களைச் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட வடக்கின் பல மாவட்டங்களிலும் பல மீள்குடியேற்றக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது.

இது தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மீள்குடியேறிய அனைத்து மக்களினதும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம், எமது மக்களின் வீடில்லாப் பிரச்சினை தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இது தொடர்பில் தங்களது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகின்றேன். அவற்றை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த 65 ஆயிரம் பொருத்து வீடுகளை எமது மக்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடாக வழங்கியிருந்தால், எமது மக்கள் இந்த மழைக் காலத்தில் ஓரளவு பயனடைந்திருப்பார்கள் என நம்புகின்றேன்.

அதை எதிர்த்தவர்கள்,  எமது மக்களுக்கு வேறேதும் வீட்டுத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கும் முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக, இவர்களது வினைத்திறனற்றதும், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஆற்றல் மற்றும் அக்கறையில்லாததுமான இந்தச் செயற்பாடுகளால் எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் இல்லாதொழிக்கப்படுகின்றன.

எனவே, எமது மக்களின் உண்மையான தேவை நிலைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகளை நாங்கள்தான் எடுக்க வேண்டியுள்ளது என்பதை இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வருவதுடன்,

அதே நேரம், கடலோரக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் முன்னெடுக்கப்டவுள்ள நிலையில், அதனை விரைந்து முன்னெடுக்கும்படி கேட்டுக் கொள்வதுடன், அதன் ஊடாக எமது மக்களில் குறிப்பிட்டளவு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

குறிப்பாக, அறநெறி பாடசாலைகளின் தரத்தினை முன்னேற்றுவதற்கும், அதன் கட்டமைப்பை வலுவுள்ளதாக மாற்றவும் அவற்றில் கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கென ஒரு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு ஒரு நடைமுறையை மேற்கொள்ளுமாறும்,

இந்து சமய பாடநெறிக் கற்கைகளை மேற்கொள்ளும் முகமாக பல்கலைக்கழக மட்டத்தில் இந்து சமய பீடமொன்றினை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

07

Related posts: