மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கமாகக் கொண்டே அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Monday, August 8th, 2022
மக்களின் எதிர்பார்ப்புக்களையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடிந்தளவு தீர்த்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முறைகேடுகள் – துஸ்பிரயோகங்கள் அற்ற வகையில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் மக்களை சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே
டிக்கொவிற்ற, உஸ்வெட்டி கெய்யாவ பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இன்று அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, எரிபொருள் தட்டுப்பாடு, கடலரிப்பு, மணல் தூர்வாருதல் போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி, தாங்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் அசௌகரியங்களுக்கு முடிவு கட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இச்சந்திப்பின் போது, வர்த்தக அமைச்சர் நளின் பெனான்டோ அவர்களும், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை
கொழும்பு தெற்கு, வெள்ளவத்தை – தெஹிவளை – கல்கிசை பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
அருட்தந்தை சக்திவேல் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, எரிபொருள் தட்டுப்பாடு, பேர்ள் எக்ஸ்பிரஸ் விபத்தினால் ஏற்பட்ட நஸ்டஈடு, மற்றும் எரிபொருள் இன்மையினால் சுமார் கடந்த ஒரு மாதமாக தொழிலில் ஈடுபட முடியாமைக்கான நஸ்ட ஈடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகளை தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக குறிப்பிடத்தக்களவு மண்ணெண்ணையை முதற் கட்டமாக ஏற்பாடு செய்து வழங்கியதுடன், ஏனைய விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு முடிந்தளவு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


