‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019

இந்த நாட்டு விவசாயத்துறைக்கு அண்மையில் ஏற்பட்டிருந்த ‘படைப் புழு” தாக்கத்தின் காரணமான அழிவைப் போன்று, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவு என்பது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலப்பகுதிக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்குச் சொந்தமான 28 ஆயிரம் மாடுகள் உயிரிழந்திருக்கின்ற விடயமானது அதிர்ச்சிக்குரிய விடயமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலே சுமார் 400க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலே கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன எனத் தெரியவருகின்றது.

அதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாடுகள் பல உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறான உயிரிழப்புகளுக்கு ஒரு வகை ‘கால் வாய்” நோயே காரணமெனக் கூறப்பட்டது.

அதாவது, கால்நடைகளுக்கான பிரத்தியேகமான மேய்ச்சல் தரைகள் இல்லாததன் காரணமாக கால்நடைகள் கால்வாய்களை – குளக் கட்டுகளை அண்மித்த பகுதிகளில் மேய்வதன் காரணமாக, அப்பகுதி வாழ் நத்தைகளின் ஊடாக இந்நோய் பரவுவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், குறிப்பாக, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், குமுழமுனை, நாயாறு, தண்ணிமுறிப்பு, ஒதியமலை போன்ற பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், அங்கு ஒரு பிரத்தியேக மேய்ச்சல் தரை இல்லை.

கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்ற நிலையில், அங்கும் பிரத்தியேக மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால், கால்நடைகளால் தங்களுக்கு பெரும் பாதிப்புககள் ஏற்பட்டு வருவதாக விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் நெற்செய்கைகள் மேற்கொள்ளும்போது, கால்நடைகளை எங்கே மேய்ப்பது? என கால்நடை வளர்ப்போர் கேள்வி எழுப்புகின்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கென 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த இடத்தை இப்போது வனவளத் திணைக்களம் சொந்தம் கொண்டாடி வருவதாகத் தெரிய வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் கால்நடைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை,பாதுகாப்பின் பெயரால் கைப்பற்றிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படை...
யாழ் - பல்கலை விஞ்ஞான பீட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!