அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 19th, 2016

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கன. அதே நேரம் மேற்படி உற்பத்திகளுக்கான வெளிநாட்டு உள்நாட்டு சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.  கொழும்பில் விஷேட கைப்பணி மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கான முயற்சியும் பாராட்டத்தக்கது.அதே நேரம், வடக்கில் யாழ் மாவட்டத்தில் அச்சுவேலியில் ஆரம்பிக்கப்பட்ட கைத்தொழிற் பேட்டையானது ஆரம்பத்தில் அது சார்ந்து காட்டப்பட்ட கவனம் தற்போது குறைந்துள்ள நிலையில் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வருதாகத் தெரிய வருகிறது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

அரச வியாபாரங்களை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், உப்பு உற்பத்தி நிலையங்கள் துன்ப நிலையில் இருப்பதாகவும் அவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. நமது நாட்டில் தற்போது பல அரச வியாபார நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஒதுக்கீடானது முரண்பாடாகவே தெரிகிறது.இவ்வாறு நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களை அரசு தொடர்ந்து செயற்படுத்த முனைவதால் அதனால் ஏற்படுகின்ற நட்டத்தை எமது மக்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே மேற்படி நிறுவனங்கள் குறித்து அரசு ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வரவேண்டியது அவசியமாகும்.

அத்துடன் உள்ளூர் உற்பத்திகளையும் உள்ளுர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மட்டுமன்றி, வட கடல் நிறுவனம், வவுனியா கைத்தொழிற் பேட்டை ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள கைத்தொழில் நிறுவனங்கள் குறித்தும் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பிரமிட் மற்றும் கடன் வசூலிப்புத் திட்டங்களுக்கு எதிரான சட்டங்களை நிதி நிறுவனங்கள் வரை நீடிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை நான் பெரிதும் வரவேற்கிறேன்.இத் திட்டங்களால் யுத்த அவலங்களுக்கு உள்ளான வடக்கு – கிழக்கு மக்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர். அந்தளவுக்கு இப் பிரச்சினை எமது மக்களுக்கு பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் இதற்கெதிரான சட்ட நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளும்படி எமது மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றேன் என புதிய வரவு செலவு திட்டத்தினூடாக டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை முன்வைத்துள்ளார்.

07

Related posts:


வடக்கு - கிழக்கில் "கள்" இறக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - டக்ளஸ...
ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்ச...
இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் - கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவை...