ஊடகத் துறையானது மக்கள் என்ற தளத்தில் உறுதியாக தூக்கி நிறுத்தப்பட வேண்டும்!

Sunday, December 10th, 2017

ஜனநாயத்தின் நான்காவது தூணாக விளங்குவது ஊடகம் என்றே கூறப்படுகிறது. அந்த ஊடகத்துறையானது ஜனநாயகத்தை உறுதியாக தாங்கி நிற்க வேண்டும். மக்களாட்சி என்ற மகத்தான கொள்கையை இந்த நாடு கொண்டிருக்க வேண்டுமேயானால் ஊடகத் துறையானது, மக்கள் என்ற தளத்தில் உறுதியாக தூக்கி நிறுத்தப்பட வேண்டும்.

18 ஆம் நூற்றாண்டில் கடற்படையை யார் தம் வசம் வைத்திருந்தார்களோ அவர்களுக்குத்தான் இந்த உலகு சொந்தமாக இருந்தது என்றும்,…19 ஆம் நூற்றாண்டில் விமானப்படையை யார் தம் வசம் வைத்திருந்தார்களோ அவர்களே உலகின் தீர்மானகரமான சக்திகளாக திகழ்ந்தனர் என்றும்,… அறிவியல் நாகரீக உலகாக வளர்ந்து வந்த இருபதாம் நூற்றாண்டில் ஊடகத்துறையை எவர் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கே உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும் என்றும்,…மாறி வந்த உலகத்தின் போக்கை உணர்ந்து ஊடகத்துறையின் முக்கியத்துவம் குறித்து உலக முன்னோர்களால் கூறப்பட்ட கருத்தை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்

ஊடகத்துறையால் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திவிட முடியும் என்பதற்கு அப்பால்,…அந்த ஊடகத்துறையை யாருக்காக?, எதற்காக பயன் படுத்த வேண்டும் என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்து நிற்கின்றது. ஊடகங்களை நடத்துவோர் அதை தமக்காக பயன்படுத்துவதா?..
அல்லது அதை ஒரு மக்கள் சமூகத்திற்காக பயன்படுத்துவதா? என்பதில் தெளிவு காணப்படுவது அவசியமாகும்.
ஊடகங்களை அழிவிற்காக பயன்படுத்தலாம், ஆக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் பிரசார மந்திரியாக இருந்த கோயபல்ஸ் பாணியிலும் ஊடகத்துறையைப் பயன் படுத்தலாம்.

அது உலக மக்களின் அழிவிற்கு வழி வகுத்தது. திரும்பச் திரும்பச் சொல்லுகிறபோது, பொய்கூட உண்மையாகும் என்பதுதான் கோயபல்சினுடைய அடிப்படைத்தத்துவமாக இருந்தது.அதே காலத்தில் சோவியத் கம்யூனிஸ் கட்சியால் நடத்தப்பட்டு,.. உலக விடுதலை போராட்டங்களுக்கு வழிதிறந்து விட்ட பிராவ்தா என்ற பத்திரிகையின் பாணியிலான ஊடகங்களே தேவை…எமது மக்கள் நெருப்பின் மீது நடந்து வந்தவர்கள். சாம்பல் மேடுகளிலும் சாக்காடுகளிலும் வாழ்ந்து வந்தவர்கள். இழப்புக்களையும் அவலங்களையும் சந்தித்து வந்தவர்கள்.

இந்த இழப்புகளுக்கு ஈடாக எமது மக்கள் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ்தலுக்குரிய அரசியலுரிமை சுதந்திரத்தை விரும்புகிறார்கள்.
அவ்வாறான ஒரு உரிமை வாழ்வை நோக்கி எமது மக்களை அழைத்து செல்லும் பாரிய பொறுப்பு ஊடங்களுக்கும் இருக்கின்றது என்று நம்பகின்றேன். ஊடகங்கள் சரியான திசையை மக்களுக்கு காட்ட வேண்டும்.

மக்களுக்கு மட்டுமன்றி அரசியல் கட்சி தலைமைகளுக்கும் ஊடகங்களே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.தென்னிலங்கையில் சிங்கள மக்களை உசுப்பேற்றும் வகையில் பேரினவாதம் பேசப்பட்டாலோ, அது போல் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களை உசுப்பேற்றும் குறுந்தேசிய இன வாதம் பேசப்பட்டாலோ அதற்கும் முக்கியத்துவம் வழங்குவதை விடவும் இனங்களின் ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் கருத்தில்கொண்டு ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்பதே நன்மையாக அமையும்.

இரு தரப்பிலும் இருந்து எழுகின்ற இன்வாதக்கருத்துக்களை ஊடகங்கள் கண்டிக்க முன் வரவேண்டும். ஒடுக்கும் பேரினவாதத்திற்கு எதிராகவே ஒடுக்கப்படும் மக்களின் தேசிய உணர்வு எங்கும் மேலோங்கத் தொடங்குகின்றது. ஆனாலும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் தேசியம் என்பது எனறுமே ஒரு முற்போக்கு தேசியவாதமாக இருக்க வேண்டும்.நானும் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தில் பிரதான பங்கெடுத்தவன். அதற்காக ஒரு தேச விடுதலைக்கான போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றவன்.

ஆனாலும் அன்றைய பேரினவாதத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்னொரு பிற்போக்கு குறுந்தேசிய வாதத்தை வளர்த்துவிடுதற்கு நான் ஒரு போதும் துணை போனவன் அல்ல என்பதையும் கூறிவைக்கவிரும்புகின்றேன்.அன்றைய ஆளும் கட்சிகளின் புறக்கணிப்பக்களையும், மாற்றாந்தாய் மனப்போக்குடனான அணுகுமுறைகளையுமே எதிர்த்து அன்று போராட்டக்களத்தில் நின்றவர்கள் நாம்.

மாறாக நாம் தமிழ் இனவாதம் பேசியவர்கள் அல்ல.இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.இன்று நாம் கேட்பது தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வின் ஊடாக ஒரு சமத்துவமான வாழ்வையேயாகும். இது சிங்கள சகோதர மக்களுக்கு எதிரானது அல்ல. இந்த நாட்டின் இறமைக்கு எதிரானதும் அல்ல. இந்த உண்மையை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள சகோதர மக்களின் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும் என்று நான் சகோதர வாஞ்சையோடு வேண்டுகோள் விடுக்கின்றேன். சிங்கள சகோதர மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றே இந்த நாட்டில் நடைமுறைக்கு வருவது சாத்தியம் – என்றார்.

Related posts: