புலம்பெயர் தேச உறவுகள்போல எம் தேச உறவுகளும் வாழும் சூழல் உருவாக வேண்டும் – காக்கைதீவில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 17th, 2017

புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகள் எவ்வாறு சந்தோசமாக நிம்மதியாக வாழ்கின்றார்களோ அதேபோன்று எமது தாயகத்தில் வாழும் மக்களும் நிம்மியுடனும் சந்தோஷத்துடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதுடன் அதற்கேற்றவகையில் எமது மக்கள் எமக்கான அரசியல் பலத்தை தருவார்களேயானால் அவ்வாறானதொரு நிலையை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காக்கைதீவில் மக்களைச் சந்தித்து சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களுக்காக இதுவரையில் சாதித்தவை என்னவென்ற கேள்விக்கு இற்றைவரையில் எவ்விதமான பதில்களையும் காணமுடியவில்லை.

எமது மக்களுக்கு யுத்தம் முடிந்து இயல்புச் சூழல் ஓரளவு தோற்றுவிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படவே செய்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளை நாம் நிவர்த்திசெய்யவேண்டிய பொறுப்புடன் அக்கறையுடனும் ஆற்றலுடனும் காத்திருக்கின்றோம்.

அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது எமது மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அரியதொரு வாய்ப்பாகவே நான் கருதுகின்றேன்.

இந்த வாய்பை எமது மக்கள் உரிய முறையில் பயன்படுத்துவார்களேயானால் மக்களுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்.

இந்நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகள் தாம் வாழும் நாடுகளில் எவ்வாறானதொரு சந்தோசமான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றார்களோ அதேபோன்றதொரு சூழ்நிலையை இங்கும் தோற்றுவித்து அதனூடாக அவர்களது வாழ்க்கைமுறையை மேம்படுத்தி அவர்களுக்கான நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதே  எமது நிலைப்பாடாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts: